அஞ்சான் டீசருக்கே 'சக்சஸ் மீட்'...! அட இவங்க அலம்பல் தாங்கலப்பா!!
முன்பெல்லாம் திரைப்படங்களுக்கு வெற்றிகரமான 25 வது வாரம் என்ற போஸ்டர்கள்தான் கண்ணைக் கவரும். வெள்ளிவிழா கொண்டாடிய காலம் போய், 100 வது நாள் போஸ்டர் ஒட்டி கலங்கடித்தார்கள்.
இன்றைக்கு படம் ரிலீஸ் ஆகி மறுநாளே வெற்றிநடை போடுகிறது என்ற போஸ்டர் ஓட்டுகின்றனர். அட அதுதான் போகட்டும் என்று விட்டால் மூன்றாவது நாளே படம் ரூ.100 கோடி வசூல் என்று கூறி சக்சஸ் மீட் போடுகின்றனர்.
சரி அதைகூட விட்டுவிடலாம், இப்போது யுடியூப்பில் வெளியான டீசர் ஒன்றை பத்து லட்சம் ரசிகர்கள் பார்த்து உள்ளனர் என்று சக்சஸ் மீட் வைத்துள்ளனர் அஞ்சான் படக்குழுவினர். 'என்னது டீசருக்கெல்லாம் சக்சஸ் மீட்டா? என்று மிரள வேண்டாம் தொடர்ந்து படிங்கப்பா.

அஞ்சான் டீசர்
சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கி இருக்கும் படம் அஞ்சான். வரும் ஆகஸ்ட் 15 அன்று திரைக்கு வரும் இப்படத்தின் டீசர் (அதாவது ட்ரைலருக்கு முன்பாக வெளிவரும் மினி ட்ரைலர்) சில நாட்களுக்கு முன்பு யூ ட்யூபில் வெளியானது.

48 மணி நேரத்தில்
டீசர் வெளியான 48 மணி நேரத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் அதனை பார்த்தனர். தமிழ் சினிமாவின் டீசர் வரலாற்றில் இது ஒரு சாதனை என்பதால் அதனை கொண்டாடும் வகையில் அஞ்சான் அணி இன்று சக்சஸ் மீட் ஒன்றை நடத்தியது.

கேக் ஊட்டுவோம்ல
சூர்யா, லிங்குசாமி மற்றும் யூ.டி.வி தனஞ்செயன் ஆகியோர் இந்த சாதனை சந்திப்பில் கலந்து கொண்டனர். அப்போது சூர்யாவும், லிங்குசாமியும் பரஸ்பரம் கேக் பரிமாறிக்கொண்டார்கள்.

சக்சஸ் மீட் ஏன்
ஒரு படம் ரிலீஸ் ஆகி சேர்ந்தாற்போல முதல் இரண்டு வார இறுதி நாட்களின் கலக்சன் கிடைத்தாலே வெற்றியாக கருதப்பட்டது. அதிலும் சில பெரிய பட்ஜெட் படக்குழு போட்ட பல கோடிகளை எடுக்கும் முன்பே ரிலீஸான சூட்டோடு ‘சக்சஸ் மீட்' நடத்தி எங்கள் படம் வெற்றி என தம்பட்டம் அடிக்க ஆரம்பித்தன.

அதெல்லாம் பழசுப்பா
இதைக்கண்ட ரசிகர்களும், சினிமா வர்த்தகம் தெரிந்தவர்களும் ஆச்சர்யத்தில் சற்று மிரண்டுதான் போனார்கள். இப்போது அந்த யுக்தியும் பழையதாகி விட்டது என்பதற்கு உதாரணம்தான் அஞ்சான் படத்தின் டீசர் சக்சஸ் மீட்.

அலம்பல் தாங்கலப்பா
‘இதெல்லாம் ஓவரா தெரியலையா?' என்று ஒருதரப்பு சினிமா ரசிகர்கள் அங்கலாய்க்க தொடங்கி விட்டனர்.

போஸ்டரைப் பார்த்தாலும்
போகிற போக்கை பார்த்தால் ‘எங்கள் பட போஸ்டரை லட்சம் பேர் பார்த்தார்கள்' என்பதற்காக சக்சஸ் மீட் நடத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!!

டிக்கெட் விற்பனைக்கு
அது ஒருபக்கம் இருக்க தெலுங்கில் ‘ஊஹலு குசகுசலாடே' என்ற சிறு பட்ஜெட் படம் பிரபல நடிகர்கள் எவருமின்றி சென்ற மாதம் 20 ஆம் தேதி வெளியாகி நல்ல வசூலை ஈட்டியது. பவர் ஸ்டார் பவன் கல்யாண் படத்திற்கு இணையாக வார இறுதி வசூல் களை கட்டியதாகப் பெருமையுடன் கூறும் இந்தப் படக்குழுவினர்,இதுவரை மொத்தம் ஒரு மில்லியன் (பத்து லட்சம்) டிக்கட்டுகள் தியேட்டர்களில் விற்பனை ஆகி இருப்பதால் அதனை கொண்டாட ஒரு சக்சஸ் மீட்டையும் நடத்தி இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











