லவ் புரோபோஷல் சொன்னவருக்கு.. ராக்கி கட்டி தக் லைஃப் கொடுத்த அஞ்சலி.. சரியான ஆளுதான் போல
சென்னை: தென்னிந்திய சினிமாவில் இயல்பான நடிப்பால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள நடிகை அஞ்சலி, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அண்மையில் அளித்துள்ள நேர்காணலில் பள்ளிப் பருவத்தில் தனக்கு வந்த காதல் முன்மொழிவுகள் முதல் திரைத்துறையில் சந்தித்த காதல் வதந்திகள் வரை பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். குறிப்பாக, பள்ளியில் தனக்கு காதல் சொன்ன சக மாணவருக்கு ராக்கி கட்டிய சம்பவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
'கற்றது தமிழ்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான அஞ்சலி, தொடர்ந்து 'அங்காடித் தெரு', 'எங்கேயும் எப்போதும்', 'கலகலப்பு' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். கவர்ச்சியை விட கதைக்கும், நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்த அவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தனது தனித்துவமான இடத்தை தக்க வைத்துள்ளார்.
அண்மையில் ஒரு நேர்காணலில் பேசிய அஞ்சலியிடம், "உங்களுக்கு காதல் சொன்னவருக்கு ஏன் ராக்கி கட்டினீர்கள்?" என்று கேட்டதற்கு, அதற்கு சிரித்தபடியே பதிலளித்த அஞ்சலி, "அது ஒரு ஈகோ விஷயம். 'ராக்கி கட்டிப் பார்' என்று அவர் சவால் விட்டார். நானும் யோசிக்காமல் உண்மையிலேயே ராக்கி கட்டிவிட்டேன்" என்று கூறினார்.
அந்த சம்பவம் குறித்து தொடர்ந்து பேசிய அவர், பள்ளியில் படித்தபோது ஒரு மாணவன் ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்து தன்னிடம் காதலை வெளிப்படுத்தி வந்ததாக தெரிவித்தார். ஆரம்பத்தில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், தொடர்ந்து காதல் சொல்லி வந்ததால் பத்தாம் வகுப்பில் அவருக்கு ராக்கி கட்டியதாக கூறினார்.

ஆனால், அதற்குப் பிறகு நடந்த சம்பவம் இன்னும் சுவாரஸ்யமாக இருந்ததாக அஞ்சலி தெரிவித்தார். "ராக்கி கட்டியதும் அவன் என்னை தொந்தரவு செய்ய மாட்டார் என்று நினைத்தேன். ஆனால் அவனோ, 'நான் அண்ணன் இல்லை... கண்ணன்' என்று சொல்லிவிட்டு ராக்கியை கழற்றி எறிந்துவிட்டு சென்றுவிட்டாராம். அதன் பிறகு அவனை நான் மீண்டும் பார்க்கவே இல்லை" என்று சிரித்தபடி கூறினார்.
திரைத்துறைக்கு வந்த பிறகும் காதல் புரபோசல்கள் வந்ததா? என்ற கேள்விக்கும் அஞ்சலி மிகவும் சாதுரியமாக பதிலளித்தார். "ஒரு முன்னணி நடிகர் உங்களுக்கு காதல் தெரிவித்ததாக செய்திகள் வந்ததே?" என்று கேட்கப்பட்டபோது, "சமீபத்திய விஷயத்தைப் பற்றியா கேட்கிறீர்கள்? இல்லை பழைய விஷயத்தைப் பற்றியா?" என்று முதலில் எதிர்கேள்வி எழுப்பினார்.

நீங்கள் யாருடைய பெயரை எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை. நான் ஒரு பெயரைச் சொன்னால், நீங்கள் வேறு ஒரு பெயரைச் சொல்வீர்கள். அதனால் யாருடைய பெயரையும் சொல்ல விரும்பவில்லை. தற்போது என் வாழ்க்கையில் அப்படி யாரும் இல்லை" என்று சிரித்தபடியே பதிலளித்து அந்த கேள்வியை நாசூக்காகத் தவிர்த்தார். அஞ்சலி இவ்வாறு பகிர்ந்து கொண்டது பலருக்கும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications