CSK - மந்திரவாதியா மாறிய அஞ்சனா ரங்கன்.. சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்கே இவங்கதான் காரணமா?
சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை வழக்கம் போல் ஏகப்பட்ட பிரபலங்கள் கண்டு ரசித்தனர். சன் மியூசிக்கில் விஜேவாக பணியாற்றிய அஞ்சனா ரங்கன் நேற்று நடைபெற்ற போட்டியை தனது தோழியுடன் கண்டு ரசித்தார். போட்டி முடிந்து வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, அவர் ஆருடம் பார்த்தது எல்லாம் அப்படியே நடந்ததாக கூறியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் 141 ரன்களுக்குள் சுருட்டியது.

அதன் பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பத்திலேயே அதிரடி காட்டிய நிலையில், 18.2 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடந்த சில போட்டிகளில் சென்னையில் தோல்வியை சந்தித்து வந்த நிலையில், நேற்றைய போட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது.
ஐபிஎல் பார்த்த நெல்சன், கவின்: ஸ்டார் படத்தின் ஹீரோ கவின் நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை சேப்பாக்கம் மைதானத்துக்கு சென்று பார்த்து ரசித்தார். நெல்சன் மற்றும் ரெடின் கிங்ஸ்லி டீமுடன் கவின் நேற்றைய கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்த போது ரசிகர்கள் கவினை பார்த்து ஸ்டார் கவின் என ஆரவாரம் செய்தனர். அதைப்போல நெல்சனை பார்த்த ரசிகர்கள் ஜெயிலர் 2 படத்தின் அப்டேட்டையும் கேட்டனர்.

சாக்ஷி முதல் அஞ்சனா வரை: பிக் பாஸ் பிரபலமான சாக்ஷி அகர்வால் நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டு ரசித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அவுட் ஆகும் போதெல்லாம் அவர் தலையில் கை வைத்து அப்செட்டான காட்சிகளை கேமராமேன் அழகாக படம் பிடித்துக் காட்டினார். அதேபோல சன் மியூசிக் விஜேவான அஞ்சனா ரங்கன் தனது தோழியுடன் கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்தார்.
மந்திரவாதியான அஞ்சனா?: அஞ்சனா ரங்கன் மற்றும் அவரது தோழி இருவரும் கிரிக்கெட் போட்டியை பார்த்து முடித்த பின்னர் டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தனர். அப்போது, அஞ்சனா ரங்கன் மந்திரவாதி போல செயல்பட்டார் என்றும் ஃபோர் போகும் என்றால் ஃபோர் போகிறது. சிக்ஸ் போகும் என்றால் சிக்ஸ் போகிறது. அவுட் ஆவார்கள் என்றால் அவுட் ஆகின்றனர். அஞ்சனா ஒரு மந்திரவாதியாவே மாறி மந்திரம் போட ஆரம்பித்துவிட்டார் என அவருடைய தோழி பேசியுள்ளார்.

பிளே ஆப் கண்டிப்பா போகும்: ஆரம்பத்திலேயே இன்னைக்கு மேட்ச்ல நாமதான் ஜெயிப்போம்னு நினைச்சேன். முதல் பாதி முடிந்து குறைவான ரன்கள் எடுத்தவுடன் இன்னைக்கு தல தோனி ஆடமாட்டார் என நினைத்தேன். அதே போல அவர் களமிறங்குவதற்குள் ஆட்டம் முடிந்து விட்டது. கண்டிப்பா சென்னை அணி பிளே ஆஃப் போகும். அதில், எந்தவொரு சந்தேகமும் வேண்டாம் என அஞ்சனா ரங்கன் கூறியுள்ளார். நேற்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்ற நிலையில், ரசிகர்கள் ரொம்பவே நிம்மதியுடன் தூங்க சென்றனர். அடுத்து நடைபெற உள்ள போட்டியிலும் சென்னை அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃப்புக்கு செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளன.


Click it and Unblock the Notifications











