'பெண்ணாக இருப்பது சோர்வை தருகிறது..' ஷாப்பிங் மாலில், பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடுமை.. ஆவேசப் பதிவு
கொச்சி: பிரபல மால் ஒன்றில் தன்னிடம் இரண்டு பேர் தவறாக நடந்துகொண்டதாக பிரபல நடிகை பகீர் புகார் கூறியுள்ளார்.
பிரபல மலையாள நடிகை அன்னா பென். மதுக்குட்டி சேவியர் இயக்கிய ஹெலன் படம் மூலம் பிரபலமானவர்.
கும்பளாங்கி நைட்ஸ், கப்பேலா ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், தனது நடிப்பால் ரசிகர்களிடம் தனியிடம் பிடித்திருக்கிறார்.

பின்னால் கை வைத்தார்
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரி பகுதியில் நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சூப்பர் மார்கெட்டில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த இடத்தில் இரண்டு பேர், என்னை கடந்து சென்றனர். ஒருவர் என்னை கடந்து செல்லும்போது என் பின்பக்கத்தில் கைவைத்துச் சென்றார்.

முற்றிலும் தவிர்த்தனர்
அது அதிர்ச்சியை கொடுத்ததால் உடனடியாக எதிர்வினையாற்ற முடியவில்லை. அதோடு தவறாகக் கை பட்டிருக்கலாம் என நினைத்தேன். ஆனாலும் ஏதோ ஒன்று தவறாக இருக்கிறது என்றால் அதை உணர முடியும். கொஞ்சம் தூரத்தில் நின்ற என் சகோதரி இதை பார்த்திருக்கிறார். நான் அவர்களை நோக்கி சென்ற போது என்னை முற்றிலுமாக தவிர்த்தனர்.

தொடர்ந்து வந்தனர்
அப்போது கடுமையான கோபத்தில் இருந்தேன். அந்த நேரத்தில் அவர்களை எதுவும் சொல்ல முடியவில்லை. நானும் என் சகோதரியும் என் அம்மா மற்றும் சகோதரர் இருந்த காய்கறிகள் பிரிவுக்கு சென்றோம். அவர்கள் எங்களை பின் தொடர்ந்து வந்தனர். அருகில் வந்து பேச முயன்றனர்.

ஆயிரம் வார்த்தைகள்
நான் நடித்த படத்தின் பெயரை தெரிந்து கொள்ள விரும்பினர். நாங்கள் கண்டு கொள்ளவில்லை. தூரத்தில் என் அம்மா வருவதைப் பார்த்ததும் அவர்கள் சென்று விட்டனர். இந்த பதிவை எழுதும் இந்த நேரத்தில், அவர்களிடம் சொல்லிருக்க கூடிய ஆயிரம் வார்த்தைகள் எழுகின்றன.

மீண்டும் செய்வார்கள்
நான் சொல்லவில்லை. என்னால் சொல்ல முடியவில்லை. எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் சென்ற அவர்கள் இதை மீண்டும் செய்வார்கள் என்று நினைக்கும்போது, எனக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளியே செல்லும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருப்பதால், பெண்ணாக இருப்பது சோர்வை தருகிறது.

பெண்மையின் மகிழ்ச்சி
வெளியே செல்லும் என் அம்மா, தங்கை, தோழிகள் குறித்து கவலைப்பட வேண்டியிருக்கிறது. காரணம் இது போன்ற தவறான எண்ணம் கொண்ட ஆண்களால்தான். நீங்கள் பெண்களின் பாதுகாப்பை பறித்துக்கொண்டீர்கள். பெண்மையின் மகிழ்ச்சியையும் அபகரித்துக் கொண்டீர்கள்.

எனக்கில்லாத தைரியம்
நான் உங்களை வெறுக்கிறேன். அவர்களின் முகத்தில் ஓங்கி அறையும், எனக்கில்லாத தைரியம் இந்தப் பதிவை படிக்கும் பெண்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இவ்வாறு நடிகை அன்னா பென் கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் கமென்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











