மிரட்டும் கொரோனா.. சென்னையிலேயே தொடங்கும் அண்ணாத்த படப்பிடிப்பு.. பிரமாண்டமாய் தயாராகும் செட்!
சென்னை: மீண்டும் கொரோனா வைரஸ் மிரட்ட தொடங்கியுள்ள நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் சென்னையிலேயே தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் நடிகர் ரஜினிகாந்த் முதல் முறையாக இணைந்துள்ள படம் அண்ணாத்த.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் நடிகைகள் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சூரி, சதீஷ் வேல ராமமூர்த்தி என பலர் நடிக்கின்றனர்.

படக்குழுவில் கொரோனா
இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த டிசம்பர் மாதம் ஹைத்ராபாத்தில் தொடங்கியது. படப்பிடிப்பில் பங்கேற்ற 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

மருத்துவமனையில் அனுமதி
தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினிகாந்த். அங்கு சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகு மீண்டும் சென்னைக்கு வந்தார் ரஜினிகாந்த்.

மீண்டும் படப்பிடிப்பு
வீட்டிலும் சில நாட்கள் ஓய்வில் இருந்த ரஜினிகாந்த் கடந்த மாதம் முதல் வெளியில் தலைக்காட்ட தொடங்கினார். இதனை தொடர்ந்து மார்ச் மாதம் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என தகவல் வெளியானது.

சென்னையில் ஷூட்டிங்
இந்நிலையில் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் சென்னையிலேயே தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் மீண்டும் மிரட்டி வரும் நிலையில் ரஜினிகாந்தின் உடல்நலனை கருத்தில் கொண்டு சென்னையில் படப்பிடிப்பை தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.

பிரமாண்ட செட்
இதற்காக சென்னையில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஓரிரு நாட்களில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.
Recommended Video

இமான் இசை
இதனை தொடர்ந்து படக்குழு கோவை மற்றும் வால்பாறை பகுதிகளிலும் ஷூட்டிங் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் தீபாவளிக்குதான் அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.


Click it and Unblock the Notifications











