ரஜினியின் தலைவர் 173.. அப்போ சுந்தர்.சி வெளியேறினார்.. இப்போ சிபி சக்கரவர்த்தியா?.. இயக்குநர் யார்?
சென்னை: ரஜினிகாந்த்தை வைத்து கமல்ஹாசன் தயாரிக்கும் படத்துக்கு தலைவர் 173 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. முதலில் இப்படத்தை சுந்தர்.சி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என்று முடிவானது. படத்தின் ஷூட்டிங்கும் இந்த மாதத்தில் தொடங்கும் என்று கூறப்பட்டது. சூழல் இப்படி இருக்க அந்தப் படத்திலிருந்து சிபி சக்கரவர்த்தி வெளியேறிவிட்டார் என்று புதிய தகவல்கள் வந்திருக்கின்றன.
ரஜினி நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. எனவே அந்தத் தோல்வியை தனது அடுத்தடுத்த படங்களில் சரி செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறார் ரஜினி. அந்தவகையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்திருக்கிறார். அதில் இன்னும் இரண்டு, மூன்று நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்திக்கும்போது சூப்பர் ஸ்டார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில மாதங்களில் படம் ரிலீஸாகிவிடும்.

தலைவர் 173: இதற்கிடையே கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும் அந்தப் படத்தை சுந்தர்.சி இயக்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது. வேலைகள் மும்முரமாக தொடங்கிய சூழலில்; படத்திலிருந்து விலகுகிறேன் என திடீரென அறிவித்தார் சுந்தர். அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஏற்கனவே ரஜினியை வைத்து அருணாச்சலம், கமல்ஹாசனை வைத்து அன்பே சிவம் ஆகிய படங்களை அவர் இயக்கியிருக்கிறார். ஏன் அவர் விலகினார் என்று தலையை பிய்த்துக்கொண்டார்கள் ரசிகர்கள். இறுதிவரை உறுதியான பதில் எதுவும் தெரியவில்லை.
சிபி சக்கரவர்த்தி இயக்குநர்: சுந்தர் வெளியேறியதைத் தொடர்ந்து தலைவர் 173 இயக்குநர் யார் என்ற கேள்வி எழுந்தது. அதில் பல பெயர்கள் அடிபட்டன. இறுதியாக டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி செய்யப்பட்டார். அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வந்தது. டான் பட சமயத்தில் ரஜினியை சந்தித்தபோது; சிபி சொன்ன ஒன்லைன் ரஜினியின் நியாபகத்துக்கு வர; உடனே அதை டெவலப் செய்ய சொல்லி ரஜினியும், கமலும் ஓகே சொல்லிவிட்டார்கள் என்று திரைத்துறையிலிருந்து கூறினார்கள்.
சத்தியம் செய்த சிபி: மேலும் வித் லவ் பட விழாவில் பேசிய சிபி, 'இந்தப் படம் அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் இருக்கும். இது சத்தியம்' என கூறியிருந்தார். மேலும் ஏப்ரல் மாதத்தில் ஷூட்டிங் செல்ல திட்டமிட்டிருக்கிறோம் என்றும் அப்டேட் கொடுத்திருந்தார். இந்நிலையில் இந்தப் படம் பற்றி புதிய தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது. அதாவது இப்படத்திலிருந்து அவர் வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. சிபி டெவலப் செய்த கதையில் சில விஷயங்கள் ஒத்து வராததால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் வட்டமடிக்கின்றன.
யார் இயக்குநர்?: சுந்தர்.சியை தொடர்ந்து சிபியும் வெளியேறிவிட்டார் என கூறப்படுவதால்; அடுத்து யார் படத்தை இயக்குவார் என்ற கேள்வியும் எழுந்தது. சிபிக்கு பதில் அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்தை இயக்கவிருக்கிறாராம். ஏற்கனவே சூப்பர் ஸ்டாரை பார்த்து ஒரு கதையை சொல்லியிருந்தார் அஸ்வத். அதன் மீது ரஜினிக்கும், கமலுக்கும் நம்பிக்கை இருப்பதால்; சிபியின் இடத்தை அஸ்வத்தை வைத்து ஃபில் செய்துகொள்ள பிளான் செய்துவிட்டார்கள் என்றும்; இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வரும் என்றும் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications















