எதிலுமே கலந்துக்கல.. அப்புறம் ஏன் அஜித்துக்கு விருது.. கேள்வி எழுப்பிய பிரபலம்
சென்னை: அஜித்குமாருக்கு ஒன்றிய அரசு பத்ம பூஷன் விருது வழங்கியிருக்கிறது. இதனையடுத்து பலரும் அவருக்கு தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். அஜித்தும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். சூழல் இப்படி இருக்க பிரபல பத்திரிகையாளரான வலைப்பேச்சு அந்தணன்; ஏகேவுக்கு பத்ம பூஷன் விருது வழங்கியதை கடுமையாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
அஜித்குமார் நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் வெளியாகவிருக்கின்றன. இரண்டு படங்களுமே அவருக்கு ஹிட் படங்களாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பிப்ரவரி 6ஆம் தேதி விடாமுயற்சியும், ஏப்ரல் 10ஆம் தேதி குட் பேட் அக்லியும் ரிலீஸாகின்றன. இதற்கிடையே துபாயில் நடைபெற்ற கார் ரேஸிலும் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். ரேஸ் நடக்கும் காலகட்டத்தில் படங்களில் நடிக்கமாட்டேன் என்றும் முடிவெடுத்திருக்கிறார் அவர்.

பத்ம பூஷன் விருது: சூழல் இப்படி அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்திருக்கிறது ஒன்றிய அரசு. அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான அந்தணன் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது என்ற செய்தியை கேட்டதுமே எனக்கு ஒரு பயம் வந்தது. அதாவது இவர்தான் எந்த நிகழ்ச்சிக்கும் செல்லமாட்டாரே. இதற்கும் போகாமல் விட்டுவிட்டால் பிரச்னை ஆகிவிடுமல்லவா?
அதுதான் கொள்கையே: அவருக்கு இந்த விருதை அறிவிப்பதற்கு முன்பு அவரது பிரைவசியை கெடுக்கவே முடியாது என்று நினைத்திருக்கலாம். அவரது கொள்கையே பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளமாட்டேன் என்பதுதான். அப்படிப்பட்டவருக்கு விருது கொடுத்தால் அவரது மனநிலை என்னவாக இருக்கும். நான் எனது வேலையை பார்த்துக்கொண்டு சிவனே என்று இருந்தேன். என்னை ஏன் கூட்டி வந்திருக்கிறீர்கள் என்றுதான் அவர் நினைப்பார். பிறகுதான் அவருடைய அறிக்கை வந்தது.
ஏன் திருப்பி கொடுக்க வேண்டும்: காவிரி பிரச்னையின்போது இயக்குநர் பாரதிராஜா பத்ம விருதை திருப்பி கொடுக்கப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டு இருந்தார். இப்படியெல்லாம் சிலர் விருதுகளை வாங்கிக்கொண்டு பிறகு திருப்பி தருவேன் என்று சொல்வார்கள். ஆனால் அஜித்தோ எந்த நிகழ்விலும் கலந்துகொள்ளமாட்டார். அப்படி இருக்கையில் அவர் ஏன் இந்த விருதை திருப்பி கொடுக்க வேண்டும். எதன் அடிப்படையில் அவருக்கு இப்படி ஒரு விருதை கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
நடிகராக ஏற்றுக்கொள்ளக்கூடாது: அவர் ஒரு நடிகர் என்று நினைத்து கொடுத்திருந்தால் அஜித்தே அந்த விருதை ஏற்றுக்கொள்ளக்கூடாது. ஏனெனில் அவரே தன்னை நடிகராக நினைக்கவில்லை. திரையுலகம் சார்ந்த எந்த நிகழ்ச்சியிலும் அவரை பார்க்க முடியாது. அவரை வைத்து படமெடுத்தவர்களை அவர் மதிப்பதும் இல்லை. ஒரு இசை வெளியீட்டு விழாவுக்குக்கூட அவர் வந்தது இல்லை. அவர் நடித்த படம் குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசாத ஒருவருக்கு சினிமாவில் சாதனையை செய்துவிட்டது போல் இந்த விருதை ஏன் கொடுத்தார்கள் என்றே புரியவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











