Vijay Antony - 30 வருஷம்தான் வாழப்போறோம்.. அதுல ஏன் சார் இவ்வளவு .. இப்படியான விஜய் ஆண்டனிக்கா பேரிழப்பு
சென்னை: Vijay Antony (விஜய் ஆண்டனி) விஜய் ஆண்டனி வலைப்பேச்சு அந்தணனிடம் கூறியிருக்கும் ஒரு விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது.
பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், படத்தொகுப்பாளர் என்று பல முகங்களை கொண்டவர். பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கியிருந்த அவர் கடைசியாக கொலை படத்தில் நடித்திருந்தார்.

மகள் மீரா: விஜய் ஆண்டனிக்கு மீரா, லாரா என்ற இரண்டு மகள்கள் இருந்தார்கள். அவர்களில் மீரா 12ஆம் வகுப்பு படித்துவந்தார். அவர் கடந்த ஒரு ஆண்டாக மன உளைச்சலில் இருந்ததாகவும் அதற்காக சிகிச்சை எடுத்துவந்ததாகவும் கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க நேற்று முன் தினம் காலை மீரா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலை விஜய் ஆண்டனியை உடைந்து போக செய்திருக்கிறது.
உடல் நல்லடக்கம்: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மீராவின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு டிடிகே சாலையில் இருக்கும் விஜய் ஆண்டனி வீட்டில் வைக்கப்பட்டது. அங்கு திரையுலக பிரபலங்கள் முதல் பொதுமக்கள்வரை அனைவரும் வந்து அஞ்சலி செலுத்தி விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறினர். ஆறுதல் கூறிய அவர்கள் என்னதான் ஆறுதல் சொன்னாலும் மகளை இழந்த அவர் எதை கொண்டு இனி தேறி வருவார் என்று சோகத்துடன் கூறவும் செய்தனர்.
விஜய் ஆண்டனி அறிக்கை: தனது மகள் இறப்பு குறித்து விஜய் ஆண்டனி, "அன்பு நெஞ்சங்களே என் மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகத்தைவிட சிறந்த சாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்துக்கு சென்றிருக்கிறாள். என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவளது பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்" என தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

30 வருடங்கள்தான் வாழ்க்கை: இந்நிலையில் வலைப்பேச்சு அந்தணன் விஜய் ஆண்டனி குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில், "விஜய் ஆண்டனி ரொம்பவே மென்மையான மனிதர். இதை அவர் எப்படி தாங்கிக்கொள்ளப்போகிறார் என்று தெரியவில்லை. எவ்வளவு ஹிட் கொடுத்தாலும் பொது இடத்தில் தனக்கு இசையமைக்க வராது என சொல்ல பெரிய தைரியம் வேண்டும்.
ஒருமுறை அவரிடம் நான் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் என்னிடம், 'ஏன் சார் ஒரு மனுஷன் மிஞ்சிப்போன 65 வருஷம் வாழ்வானா சார். அதுல 30 வருஷம் தூங்கிடுறான் சார். மிச்சம் இருக்க 30லிருந்து 35 வருஷம்வரைதான் இருக்கான். அதுக்குள்ள ஏன் சார் இவ்வளவு பிரச்னை,பொறாமை எல்லாம். இருக்குற வரைக்கும் எல்லோரையும் அரவணைத்து செல்வோம் சார் என கூறினார். அப்படிப்பட்ட மனிதர் இதிலிருந்து எப்படி மீளப்போகிறார்'என தெரியவில்லை என்று வருத்தத்துடன் பேசினார்.


Click it and Unblock the Notifications











