விஜயகாந்த் நிலைமை விஜய்க்கு அரசியலில் ஏற்படும்.. எச்சரிக்கை தேவை.. பிரபலம் ஓபன் டாக்
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அந்தக் கட்சி களமிறங்குகிறது. பாஜகவும், திமுகவும்தான் தன்னுடைய அரசியல் எதிரி என்பதை கட்சியின் முதல் மாநாட்டில் தெளிவுப்படுத்திவிட்டார் அவர். சூழல் இப்படி இருக்க நேற்று விசிகவின் ஆதவ் அர்ஜுனா எழுதிய 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார் விஜய்.
சினிமாவில் மும்முரமாக நடித்துவந்த விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். இனி முழுக்க முழுக்க அரசியல்வாதியாக மாறப்போகும் விஜய் அதன் காரணமாக இன்னும் ஒரே ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தை அ.வினோத் இயக்கிவருகிறார். படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க; பாபி தியோல் வில்லனாக நடிக்கிறார். கேவிஎன் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது.

Image credits: Vikatan
அரசியல் மாநாடு: இதற்கிடையே அண்மையில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தினார் அவர். அதில் பேசும்போது தன்னுடைய அரசியல் எதிரி என்றால் அது பாஜகவும், திமுகவும்தான் என்று ஓபனாக போட்டுடைத்தார். இப்படி ஒன்றியத்தில் ஆளும் அரசையும், மாநிலத்தில் ஆளும் அரசையும் ஒருசேர எதிர்க்கிறாரே என்று பலரும் ஆச்சரியம்தான் பட்டார்கள். இருந்தாலும் இப்படி செய்வதற்கு ஒரு தைரியம் வேண்டும் என்று ஒருதரப்பினர் கூறினார்கள்.
விமர்சனத்தை சந்தித்த விஜய்: சமீபத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் நிவாரண உதவிகளை வழங்கினார். ஆனால் பனையூரில் இருக்கும் தனது அலுவலகத்துக்கு மக்களை வரவழைத்து அதனை செய்தார். அது பெரும் விமர்சனத்தை சந்தித்தது. முக்கியமாக, 'அரசியலில் விஜய் Work From Home செய்கிறார்’ என்றும் கிண்டல் செய்தார்கள். ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட ட்வீட் ஒன்றை போட்டிருந்தார்.
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்: சூழல் இப்படி இருக்க விசிகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். இதில் விசிக தலைவர் திருமாவளவன், விஜய் உள்ளிட்டோர் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் திருமாவளவன் இதில் பங்கேற்கவில்லை. விஜய் பங்கேற்று நேற்று புத்தகத்தை வெளியிட்டார். அதன் பிறகு பேசிய அவர், 'இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில்கூட திருமாவளவன் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு அவருக்கு பிரஷர் தரப்படுகிறது’ என்று கூறினார். மேலும் திமுகவையும் ஓபனாக விமர்சனம் செய்தார்.
பரபரப்பு: இதன் காரணமாக தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி ரவிசங்கர்கூட இன்று தனது காட்டமான பதிலடியை விஜய்க்கு கொடுத்திருந்தார். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தனது யூடியூப் சேனலில் இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் பேசிய அவர், “விஜய்யால் மீண்டும் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. தன்னுடைய மாநாட்டிலேயே தங்களது கூட்டணியில் பாஜகவுக்கும், திமுகவுக்கும் இடமில்லை என்பதை உறுதியாக சொல்லிவிட்டார்.
கூட்டணி வரலாம்: அதேசமயம் விசிக மீது அவரது கவனம் திரும்பியிருக்கிறது. ஆனால் விஜய்யுடன் இணைவதில் விருப்பமில்லாதது போல் திருமாவளவன் சொல்லி வருகிறார். ஆனால், தேர்தல் நேரத்தில் கண்டிப்பாக இந்தக் கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதேசமயம் விஜய்யின் கவனம் முழுக்க தலித் அரசியலிலும், அம்பேத்கர் அரசியலிலும் மட்டும் இருந்தால் தென் மாவட்டங்களில் இருக்கும் பிற சாதியினர் விஜய்யின் கட்சியிலிருந்து வெளியேறுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கான ஏற்பாடுகள்தான் இதெல்லாம் என்றும் சொல்லப்படுகிறது. முக்கியமாக விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பிறகு அவருடன் இருந்தவர்கள் எல்லாம் அவரை நட்டாத்தில் விட்டுவிட்டார்கள். எனவே அந்த நிலைமை விஜய்க்கும் ஏற்படலாம். அதனால் கவனம் தேவை” என்றார்.


Click it and Unblock the Notifications











