வைரமுத்து முதல் இளையராஜா வரை.. பாடகர் அந்தோணி தாசன் அருவி மாதிரி கொட்டிருக்காரு ப்பா
சென்னை: இளையராஜாவும், வைரமுத்துவும் தமிழ் சினிமாவின் பொக்கிஷங்கள். இரண்டு பேரும் சேர்ந்து பணியாற்றிய பல பாடல்கள் தலைமுறைகள் கடந்தும் இன்னமும் கொண்டாடப்படுகின்றன. ஆல் டைம் ஃபேவரைட்டாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன. கடந்த பல வருடங்களாகவே அவர்கள் சேர்ந்து பணியாற்றுவதில்லை. இந்நிலையில் பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இரண்டு பேர் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இசைஞானி என்று கொண்டாடப்படுபவர் இளையராஜா. அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அவர் முதல் படத்திலேயே தமிழ்நாட்டின் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார். அவர் இசையமைத்த பிறகுதான் நமக்கான இசையும் திரைப்படங்களில் வரும் என்று கடைக்கோடி ரசிகனும் உணர தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு படத்திலும் புது புது இசையை கொடுத்து அனைவரையும் கவர்ந்த அவர்; அறிமுகமான சில வருடங்களிலேயே நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்தார்.

ஒரே நாளில் நிறைய படங்கள்: முக்கியமாக பாடலுக்கு இசையமைப்பதைவிடவும் படத்துக்கு ரீ ரெக்கார்டிங் செய்வது ரொம்பவே கஷ்டமான ஒன்று. ஆனால் அதையும் அசால்ட்டாக செய்தார் இளையராஜா. ஒரே நாளில் மூன்று படங்களுக்கு அவர் இசையமைத்த சம்பவம் எல்லாம் உண்டு. அதுமாதிரி வேறு யாரும் செய்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதில் சிறப்பு என்னவென்றால் ஒரு படத்தில் இருந்த இசை இன்னொரு படத்துக்கு இருக்காது. இந்த வயதிலும் போட்டி போட்டு உழைக்கும் அவர்; அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இசையமைக்கவிருக்கிறார்.
வைரமுத்துவுடன் கூட்டணி: இதற்கிடையே 80களில் வைரமுத்து - இளையராஜா கூட்டணி தமிழ் சினிமா இசையை ஆட்சி செய்தது என்றே சொல்லலாம். இரண்டு பேருமே கிராமத்து வாழ்வியலிலிருந்து வந்தவர்கள். எனவே அவர்கள் உருவாக்கிய பாடல்கள் தமிழ்நாட்டின் கடைகோடி கிராமத்தான் வரை ரசிக்க வைத்தது. நல்லபடியாக போய்க்கொண்டிருந்த அவர்களது இசை கூட்டணி திடீரென சில காரணங்களால் பிரிந்துவிட்டது. கடந்த 40 வருடஙக்ளுக்கும் மேலாக அவர்கள் சேர்ந்து பணியாற்றுவதில்லை.
அந்தோணி தாசன் பேட்டி: இந்நிலையில் பின்னணி பாடகர் அந்தோணி தாசன் சமீபத்தில் அவர்கள் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "எனக்கு எல்லாமே இளையராஜாதான். நான் பாடுவதே அவரால்தான். அவருடைய படைப்புகளில் எல்லாமே இருக்கிறது. அவருடைய மிச்சம்தான் நான். அவர் வளர்த்துவிட்டவர்களில் நானும் ஒருவன். அவரை பார்த்தால் பேச்சே வராது. அவரை பார்த்தபோது, 'ஐயா பிறவி பலனை அடைந்துவிட்டேன்' என சொன்னேன். அதற்கு அவரோ, 'நீ அடைந்துவிட்டாய்.. நான் யாரிடம் சென்று அடைவது' என சொல்லிவிட்டார். என்னை பார்த்தால் ஒரு புன்முறுவல் தெரியும்.
நிறைய பேருடன்: பாடலாசிரியர்கள பொறுத்தவரை வைரமுத்துவில் தொடங்கி கடைசியாக வந்த பாடலாசிரியர் வரை வேலை செய்திருக்கிறேன். என்னால் முடிந்த அளவுக்கும் நிறைய பாடலாசிரியர்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். தமிழ் இல்லாமல் மற்ற மொழி பாடலாசிரியர்களுடனும் பணியாற்றியிருக்கிறேன். வைரமுத்துவுடன் வேலை பார்த்தது எல்லாம் மறக்க முடியாத அனுபவம். இடம் பொருள் ஏவல் உள்ளிட்ட படங்களில் வைரமுத்து எழுதிய பாடலை பாடியிருக்கிறேன். அதேபோல் வைரமுத்து எழுதிய வரிகளுக்கு கொரோனா லாக் டவுன் சமயத்தில் கம்போஸும் செய்திருக்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications
