Ayodhya - நண்பனை பார்த்த உடனே உடும்பு புடி பிடித்த ரஜினிகாந்த்.. அயோத்தில் அனுபம் கெர் ஹேப்பி!
அயோத்தி: அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், அனுபம் கெர், கங்கனா ரனாவத், ரன்பீர் கபூர், தனுஷ், ராம்சரண், சிரஞ்சீவி, மோகன்லால் என சினிமா நடிகர்கள் பலரும் ராமரின் ஜென்ம பூமியான அயோத்தியில் முகாமிட்டுள்ளனர். அயோத்தியில் உருவாகி உள்ள ராமர் கோயில் திறப்பு விழா இன்று நடைபெற உள்ள நிலையில், சினிமா பிரபலங்கள் அயோத்தி விமான நிலையத்துக்கு வருகை தரும் காட்சிகள் தீயாக பரவி வருகின்றன. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது நீண்ட நாள் நண்பரான பாலிவுட் நடிகர் அனுபம் கெரை அயோத்தியில் பார்த்த புகைப்படம் வெளியாகி உள்ளது.
தனுஷ், விஜய்சேதுபதி எல்லாம் இப்போ எப்படி இந்தி படங்களில் நடித்து வருகின்றனரோ இதையெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே பல பாலிவுட் சூப்பர்ஸ்டார்களுடன் இணைந்து நடித்து அசத்தி விட்டார் ரஜினிகாந்த்.

பாலிவுட் நடிகர்களுடன் ரஜினிகாந்த்: அமிதாப் பச்சன் முதல் அனுபம் கெர் வரை பல பாலிவுட் நடிகர்களுடன் இணைந்து நடித்து அசத்தியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 1985ம் ஆண்டு வெளியான வாஃபாதார் படத்தில் அனுபம் கெர் உடன் இணைந்து நடித்துள்ளார் ரஜினிகாந்த். பல முறை டெல்லி மற்றும் மும்பைக்கு செல்லும் போது தனது நண்பரை சந்தித்து வரும் ரஜினிகாந்த் இந்த முறையும் நடத்திய சந்திப்பு புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த் அனுபம் கெர் சந்திப்பு: பாலிவுட்டின் மூத்த நடிகரான அனுபம் கெர் அயோத்தியில் ரஜினிகாந்த் வந்து இறங்கிய தகவல் தெரிந்ததும் ரஜினிகாந்தை சென்று சந்தித்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை அனுபம் கெர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, என்னுடைய நண்பரை சந்தித்ததில் ரொம்பவே சந்தோஷம். ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ராம ஜென்ம பூமியான அயோத்திக்கு வந்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.
உடும்பு புடி: பல வருடங்கள் கழித்து தனது நண்பர் அனுபம் கெரை பார்த்த மகிழ்ச்சியில் ரஜினிகாந்த் அவரது இரு தோள்களையும் தனது ஸ்டைலில் உடும்பு புடியாக பிடித்திருக்கும் புகைப்படம் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு டெல்லியில் தேசிய விழா ஒன்றில் பங்கேற்ற போது இருவரும் சந்தித்துக் கொண்டனர். அதன் பின்னர் தற்போது மீண்டும் சந்தித்துள்ளனர்.
நயன்தாரா படத்தில்: காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் நடித்த அனுபம் கெர் நயன்தாரா, சத்யராஜ் நடிப்பில் வெளியான கனெக்ட் படத்தில் பேய் ஓட்டும் மதகுருவாக நடித்திருந்தார். இந்த வயதிலும் தொடர்ந்து இந்தியில் பல படங்களில் நடித்து வரும் அனுபம் கெர் அரசியலிலும் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்.
அமிதாப் பச்சனையும் சந்திப்பார்: ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ள நிலையில், அயோத்தியில் இன்று ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் சந்திப்பு நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல பல பாலிவுட் மற்றும் இந்திய திரை பிரபலங்கள் ரஜினிகாந்தை சந்தித்து போட்டோக்கள் எடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











