10 நிமிஷத்துக்கு 1 லட்சம், அரை மணி நேரத்துக்கு 2 லட்சம் ரூபாய்.. பாலிவுட் பிரபலம் போட்டிருக்கும் கண்டிஷன்
மும்பை: அனுராக் காஷ்யப் பாலிவுட்டில் பிரபலமான இயக்குநராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவர் இயக்கும் ஒவ்வொரு படத்துக்கும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் கொடுப்பார்கள். இயக்கத்தில் எப்படி பிரபலமாக இருக்கிறாரோ அதேபோல் நடிப்பிலும் கவனம் செலுத்திவருகிறார். அடுத்ததாக ஜிவி பிரகாஷை வைத்து ஒரு படத்தை அவர் இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் சமூக வலைதளத்தில் அனுராக் காஷ்யப் போட்டிருக்கும் பதிவு ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
Black Friday படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அனுராக் காஷ்யப். அதன் பிறகு அவர் இயக்கிய நோ ஸ்மோக்கிங், ரிட்டர்ன் ஆஃப் ஹனுமான், தேவ் டி உள்ளிட்ட படங்கள் வரவேற்பைப் பெற்றன. அவர் இயக்கியதிலேயே பெஞ்ச் மார்க்காக கருதப்படுவது கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் திரைப்படம். அந்தத் திரைப்படம் இந்திய அளவில் கவனம் ஈர்க்க சிறந்த இயக்குநர் என்ற பெயரை பெற்றார் அனுராக்.

அனுராக்கின் கென்னடி: அவர் கடைசியாக ராகுல் மற்றும் சன்னி லியோனை வைத்து கென்னடி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்தத் திரைப்படமானது சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் மிட்நைட் ஸ்கீரினிங் பிரிவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்திருக்கிறது.
நடிக்க மறுத்த விக்ரம்: இப்படத்தில் நடிப்பதற்காக விக்ரமை முதலில் அணுகினார் அனுராக். அதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "ஒரு குறிப்பிட்ட நடிகரை மனதில் வைத்துதான் இந்தப் படத்தை நான் எழுதினேன். அதனால்தான் படத்திற்கும் 'கென்னடி' என்று பெயர் வைத்திருக்கிறேன். ஏனென்றால் அந்த நடிகரின் செல்லப்பெயர் 'கென்னடி'. 'கென்னடி' என்பது வேறுயாருமில்லை சியான் விக்ரமின் செல்லப்பெயர்தான் அது. இப்படத்தில் நடிப்பதற்காக நான் விக்ரமை தொடர்பு கொண்டேன்.
பதிலே சொல்லவில்லை: ஆனால், அவர் எந்தவித பதிலும் சொல்லவில்லை. அதன்பிறகு நடிகர் ராகுலை தொடர்பு கொண்டு பேசினேன். அவர், இப்படத்தில் நடிக்கிறேன் என்று கூறினார். அவரது பதில் எனக்கு உற்சாகமாக இருந்தது. ராகுல் அர்ப்பணிப்புடன் சுமார் எட்டு மாதங்கள் இப்படத்திற்காகவே ஒதுக்கி நடித்துக் கொடுத்தார்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர்: இயக்கத்தில் மட்டுமின்றின் நடிப்பிலும் சிறந்து விளங்கும் அவர் கடைசியாக லியோ படத்தில் நடித்திருந்தார். சில நிமிடங்களே படத்தில் அவர் தோன்றியிருந்தார். லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் இருக்க வேண்டும் என்று ரொமப்வே ஆசையாக இருக்கிறது என்று அவர் ஒரு பேட்டியில் சொல்ல; அதற்கு லியோவில் அவரை நடிக்க வைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.
ட்ரெண்டாகும் பதிவு: இந்நிலையில் அனுராக் காஷ்யப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "சினிமா தொடர்பாக என்னை சந்திக்க பல பேர் வருகிறார்கள். புதுமுகங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் சுமாரான படங்களைக்கூட ப்ரோமோட் செய்து ஊக்குவிக்கிறேன். க்ரியேட்டிவ் ஜீனியஸ் என்று என்னை நான் நினைத்துக்கொண்டு இதையெல்லாம் செய்தேன். இனி இதுபோன்று என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
பணம் கொடுங்கள்: இனி 10 முதல் 15 நிமிடம் என்னை சந்தித்து பேச வேண்டுமென்றால் ஒரு லட்சம் ரூபாயும், அரை மணி நேரம் என்றால் 2 லட்சம் ரூபாயும், ஒரு மணி நேரம் என்றால் 5 லட்சம் ரூபாயும் கொடுக்க வேண்டும். இந்த மாதிரியான சந்திப்புகளில் நான் என் நேரத்தை வீணடித்துவிட்டேன்.எனவே உங்களால் இந்தப் பணத்தை கொடுக்க முடியும் என்றால் என்னை அழையுங்கள். இல்லையென்றால் விலகியிருங்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











