பாலியல் புகார்.. அந்த நேரத்துல அனுராக் காஷ்யப் இந்தியாவிலேயே இல்லையாம்.. போலீசில் தகவல்!
மும்பை: பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்ட காலகட்டத்தில் அனுராக் காஷ்யப் இந்தியாவிலேயே இல்லை என்று போலீசாரிடம் கூறப்பட்டுள்ளது.
தமிழில், அஜய் ஞானமுத்து இயக்கிய இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் அனுராக் காஷ்யப்.
பிரபல இந்தி நடிகரும் இயக்குனருமான இவர், பல படங்களை அங்கு இயக்கி இருக்கிறார்.

பாலியல் புகார்
பிளாக் ஃபிரைடே, தேவ்.டி, தி லன்ச் பாக்ஸ், கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் உட்பட பல இந்தி படங்களை இயக்கியுள்ளார். பல படங்களில் நடித்தும் உள்ளார். இவர் மீது நடிகை பாயல் கோஷ், பாலியல் புகார் கூறி இருந்தார். இவர் தமிழில் தேரோடும் வீதியிலே என்ற படத்தில் நடித்திருந்தார். தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை
'2013 ஆம் ஆண்டு வாய்ப்பு கேட்டு அவர் வீட்டுக்கு சென்றேன். தனியறைக்கு அழைத்துச் சென்ற அவர், திடீரென்று ஷோபாவில் தள்ளினார். கட்டாயப்படுத்தி என் மீது சாய்ந்தார். நான் கத்த முயன்றேன். அவர் என் வாயை அழுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார். பிறகு சுதாரித்து அங்கிருந்து தப்பி வீட்டுக்கு வந்தேன்' என்று கூறியிருந்தார்.

போலீஸ் நிலையம்
இந்த பாலியல் புகார் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் குற்றச்சாட்டை அனுராக் காஷ்யப் மறுத்திருந்தார். அவருக்கு ஆதரவாக பல நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். இதையடுத்து மும்பை வெர்சோவா போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார் பாயல்.

போலீசார் சம்மன்
போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுக்காததால் பாயல் கோஷ், மத்திய சமூக நீதித்துறை மந்திரி ராம்தாஸ் அத்வாலேயுடன், கவர்னரை சந்தித்து முறையிட்டார். அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அனுராக் காஷ்யப்பிற்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

பெண் போலீஸ்
வெர்சோவா போலீஸ் நிலையத்தில் நேற்று ஆஜரான அவரிடம் பெண் போலீஸ் அடங்கிய குழு விசாரணை நடத்தியது. அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் அவர் போலீஸ் விசாரணையில் பேசியது பற்றி இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video

இந்தியாவில் இல்லை
விசாரணையில் தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவர் மறுத்துள்ளார். இதுபற்றி அவர் வழக்கறிஞர் பிரியங்கா கூறும்போது, பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்பட்ட ஆகஸ்ட் 2013-ல் அனுராக், இந்தியாவில் இல்லை. படப்பிடிப்புக்காக அவர் இலங்கையில் இருந்தார். அதற்கான ஆதாரத்தையும் கொடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











