Anushka - அனுஷ்கா முதன்முறையாக செய்யப்போகும் செயல்.. இனி அந்த ஃபீல்டிலும் தேவசேனா ஆட்சி நடக்குமா?
திருவனந்தபுரம்: Anushka (அனுஷ்கா) நடிகை அனுஷ்கா பற்றிய லேட்டஸ்ட் தகவல் ஒன்று அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

தெலுங்கில் 2005ஆம் ஆண்டு சூப்பர் படத்தில் அறிமுகமான அனுஷ்கா அருந்ததி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பேய் படமான அருந்ததியில் அனுஷ்காவின் நடிப்பு பட்டையை கிளப்பியது. அதுமட்டுமின்றி ஹீரோவுக்கு சமமான ரெஸ்பான்ஸும் கிடைத்தது. மேலும் அறிமுகமான சில வருடங்களிலேயே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு பாராட்டும் கிடைத்தது.
பாகுபலி அனுஷ்கா: இதனையடுத்து தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வர ஆரம்பித்தார். தமிழ், தெலுங்கில் தனித்தனி மேனேஜரை வைத்திருக்கும் அளவுக்கு பிஸியான நடிகையாக திகழ்ந்தார் அனுஷ்கா. தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்தார். பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் இந்திய அளவில் ஹிட்டடித்தது. இதனையடுத்து மேற்கொண்டு பிரபலமான அனுஷ்கா ரசிகர்களால் தேவசேனா என்று அழைக்கப்பட்டார்.
குறைந்த வாய்ப்பு: ஃபுல் ஃபார்மில் இருந்த அனுஷ்கா ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்தார். அந்தப் படத்துக்காக உடல் எடையையும் கூட்டினார். ரொம்பவே டெடிகேஷனாக அந்தப் படத்துக்கு உழைத்தாலும் படம் எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்கவில்லை. அதுமட்டுமின்றி ஏற்றிய உடல் எடையை குறைக்க முடியாமலும் திணறினார். இதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்தன.
செகண்ட் இன்னிங்ஸ்: இந்த சூழலில் அனுஷ்கா தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். அதன்படி மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் நடித்தார். படமானது கடந்த 7ஆம் தேதி வெளியானது. ஜவானோடு ரிலீஸானதால் படம் அடி வாங்கிவிடுமோ என்ற எண்ணம்தான் ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் ஃபீல் குட் படமாக அந்தப் படம் அமைந்திருக்கிறது. இதன் காரணமாக செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பத்திலேயே அனுஷ்கா உற்சாகமாக இருக்கிறார்.

மலையாளத்தில் அறிமுகம்: இந்நிலையில் அனுஷ்கா பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி தமிழ், தெலுங்கில் கலக்கிவந்த அனுஷ்கா தற்போது மலையாளத்தில் அறிமுகமாகவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அந்தப் படத்தை ஹோம் படத்தின் இயக்குநர் ரோஜின் தாமஸ் இயக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. முதன்முறையாக மலையாளத்தில் அனுஷ்கா அடியெடுத்து வைப்பதால் அங்கும் தேவசேனா தனது ஆட்சியை செய்வார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











