ஜெயிலர் ஷூட்டிங்கிற்காக கொச்சி பறந்த ரஜினிகாந்த்.. விமானத்தில் பார்த்த உடனே ஹேப்பியான அபர்ணா!
கொச்சி: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய நடிகர்கள் நடிக்கும் படமாக உருவாகி வருகிறது ஜெயிலர்.
இந்நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக கொச்சி பறந்துள்ள ரஜினிகாந்தை சந்தித்த நடிகை அபர்ணா பாலமுரளி எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

ரியல் பான் இந்தியா
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தை சேர்ந்த நடிகர்கள் நடித்து வருகின்றனர். மேலும், படமும் பல்வேறு மாநிலங்களில் படமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கொச்சிக்கு பறந்த ரஜினி
சென்னையில் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்தாலும், கர்நாடகா, மகாராஷ்ட்ரா என பல்வேறு மாநிலங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது அடுத்த கட்டமாக கேரளாவின் கொச்சியில் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அதற்காக நடிகர் ரஜினிகாந்த் கொச்சி பறந்துள்ளார்.

ரஜினியுடன் செல்ஃபி எடுத்த அபர்ணா
8 தோட்டாக்கள், சூரரைப் போற்று, நித்தம் ஒரு வானம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி கேரளாவிலும் கடந்த ஆண்டு தங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்தை விமானத்தில் பார்த்த அவர் அவருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வெறித்தனமான ரசிகை
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வெறித்தனமான ரசிகை அபர்ணா பாலமுரளி என்பதை அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார். ரஜினிகாந்தின் வீட்டுக்கு முன்பு நின்று கொண்டெல்லாம் செல்ஃபி எடுத்திருக்கிறேன் எனக் கூறியுள்ள அபர்ணா பாலமுரளி தற்போது ஃபேன் கேர்ள் மொமன்ட்டாக ரஜினியுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை ஷேர் செய்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இவரும் இருக்கிறாரா
விஜய்யின் லியோ படத்தில் அடுத்தடுத்து பிரபலங்கள் இணைந்து வருவதை போலவே ஜெயிலர் படத்திலும் பல்வேறு மாநிலத்தில் இருந்து பிரபலங்கள் இணைந்து வருகின்றனர். ரஜினிகாந்த் உடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட அபர்ணா பாலமுரளியும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறாரா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

தீபாவளி கிளாஷ்
ஜெயிலர் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் கொச்சியில் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்குத் தான் படம் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படமும் தீபாவளிக்கு வெளியானால் மிகப்பெரிய கிளாஷ் இந்த ஆண்டு வெடிக்கும் என்றும் சினிமா வட்டாரங்கள் எதிர்பார்த்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











