அப்பா ரஹ்மான் இசையமைக்க அமீன் பாடிய சகோ பாடல்: பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன் பாடிய முதல் பாப் சிங்கிளின் வீடியோ வெளியாகியுள்ளது.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் போன்றே அவரின் மகன் ஏ.ஆர். அமீனும் நன்றாக பாடுவார். இந்நிலையில் அமீன் பாடிய முதல் பாப் பாடலான சகோ வா என்கிற பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த பாடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். தந்தையும், மகனும் சேர்ந்து இந்த பாடல் வீடியோவை தயாரித்துள்ளனர். அரும்பு மீசையுடன் அமீன் பார்க்க ஸ்டைலாக உள்ளார். மேலும் தந்தையை போன்றே நன்றாக பாடவும் செய்கிறார்.
இந்த சகோ வா பாடல் வீடியோவை அமித் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். விவேக் மற்றும் ஏடிகே ஆகியோர் பாடலை எழுதியுள்ளனர். இது யார் என்று கண்டுபிடிக்குமாறு கேட்டு ஏ.ஆர். ரஹ்மான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படத்தில் இருந்தது விஜய்யின் மகன் சஞ்சய் என்றார்கள் பலர். அது சஞ்சய் இல்லை அமீன் தான்.
ஒரு கோணத்தில் பார்க்க விஜய்யின் மகன் போன்று தெரிகிறார், அவ்வளவு தான். தந்தையுடன் சேர்ந்து சகோ வீடியோவில் பணியாற்றியது மகிழ்ச்சி அளிப்பதாக அமீன் தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்கள் தன்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மகனின் அறிமுகம் குறித்து ஏ.ஆர். ரஹ்மான் கூறியதாவது,
ஒரு இசையமைப்பாளராக என் பாடல்கள் மூலம் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் அறிமுகமாகியுள்ளனர். ஏ.ஆர். அமீனுக்கு என் வாழ்த்துக்கள். அவரின் பாடல் ரசிகர்களின் மனதில் ஸ்பெஷலான இடத்தை பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
ரஹ்மான் வாழ்த்தியது நடந்துவிட்டது. ரசிகர்களுக்கு அமீனின் பாடல் மிகவும் பிடித்துள்ளது. சிலரோ, அமீன் பாடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் படங்களில் நடிக்கலாமே என்று தெரிவித்துள்ளனர்.
அமீனின் பாடல் வீடியோவை பார்த்த இசையமைப்பாளர் அனிருத் அவரை வாழ்த்தி ட்வீட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











