AR Rahman: “இத்தன வருசம் AR ரஹ்மான் மேல இருந்த மரியாதையே போச்சு..” டிக்கெட்டை கிழித்தெறிந்த ரசிகர்!
சென்னை: ஏஆர் ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
சென்னை ஈசிஆர் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஏற்பாட்டு குளறுபடிகளால் ரசிகர்கள் அவதிக்குள்ளாகினர்.
இதனால், ஏராளமான ரசிகர்கள் இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் வெளியேறிவிட்டனர்.
இந்த சம்பவத்துக்கு ஏஆர் ரஹ்மானும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் வருத்தம் தெரிவித்த நிலையில், ரசிகர்கள் டிக்கெட்டை கிழித்து எறிந்து எதிர்ப்புக் காட்டியுள்ளனர்.

ஏஆர் ரஹ்மான் மேல இருந்த மரியாதையே போச்சு: இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. கடந்த மாதம் 12ம் தேதி நடக்கவிருந்த இந்நிகழ்ச்சி, கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட டிக்கெட்டுகள் மூலம் நேற்றையை நிகழ்ச்சிக்கு அனுமதி வழக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், ரசிகர்கள் உற்சாகத்துடன் திரும்பி வந்தனர்.
சென்னை மட்டுமின்றி பெங்களூரு, மதுரை, கோவை, திருச்சி என பல ஊர்களில் இருந்தும், ரசிகர்கள் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சிக்கு படையெடுத்து வந்தனர். இன்னும் சிலரோ வெளிநாடுகளில் இருந்தும் ஏஆர் ரஹ்மான் நிகழ்ச்சிக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதிக எதிர்பார்ப்புடன் வந்த ரசிகர்களுக்கு, 'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சி மறக்க முடியாத பல மோசனமான அனுபவங்களை கொடுத்துவிட்டது.
ACTC என்ற தனியார் நிறுவனத்தால் இந்நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் சரியாக திட்டமிடவில்லை என்பதால், ரசிகர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டனர். ஏற்கனவே விற்பனையான டிக்கெட்டுகளுடன் மேலும் அதிகமான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் விற்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இட வசதியை விடவும், இரண்டு மடங்கு அதிகமான ரசிகர்கள் கூடியுள்ளனர்.
மேலும், அனைத்துவிதமான கேட்டகிரி டிக்கெட்டுகளுக்கும் ஒரேயொரு என்ட்ரி கேட் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் பலரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். பார்க்கிங் வசதியும் சரியாக செய்யவில்லை என்பதால், ஈசிஆர் சாலை முழுவதும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றவர்கள் மட்டும் இல்லாமல், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாகனமும் இந்த வாகன நெரிசலில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து விரக்தியான ரசிகர்கள், டிவிட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் ஏஆர் ரஹ்மானையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் வறுத்தெடுத்து வருகின்றனர். இதனால், மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ACTC நிறுவனம் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்தது. அதேபோல், ஏஆர் ரஹ்மானும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதாவது மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் போன ரசிகர்கள், டிக்கெட் நகலை '[email protected]' என்ற தளத்தில் பகிருமாறு ட்வீட் செய்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இதற்காக இப்போதும் மன்னிப்பு கேட்க மனம் வரவில்லையா என ஏஆர் ரஹ்மானை விளாசி வருகின்றனர். இப்படியொரு நிகழ்ச்சியை ஏஆர் ரஹ்மான் நடத்தாமலேயே இருந்திருக்கலாம் என புலம்பி வருகின்றனர். இன்னொரு ரசிகர் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.
இத்தனை வருடங்களாக ஏஆர் ரஹ்மான் மீது வைத்திருந்த மானம், மரியாதை எல்லாவற்றையும் அவரே கெடுத்துவிட்டார். பணம் கொடுத்து வாங்கிய பிளாட்டினம் டிக்கெட், இதனை கிழிக்க மனமில்லை என்றாலும் வேறு வழி தெரியவில்லை. மனமே இல்லாமல் இந்த டிக்கெட்டுகளை கிழிக்கிறேன், மக்கள் உங்கள் மீது அன்பை பொய்யாக்கிட்டீங்க ஏஆர் ரஹ்மான் என வேதனை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ டிவிட்டரில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











