AR Rahman: ஏஆர் ரஹ்மானுக்கு கச்சேரி பிரச்சினையில் தொடர்பில்லை.. நாங்களே காரணம்: நிர்வாகி மன்னிப்பு!
சென்னை: ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி சர்ச்சை மூன்று நாட்களாகியும் இன்னும் குறையவில்லை.
மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில், ரசிகர்களுக்கு சரியான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பது பெரும் சர்ச்சையானது.
அதேபோல், கூட்ட நெரிசலில் சிக்கிய பெண்கள் மீது பாலியல் சீண்டல்கள் நடைபெற்றதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், "ஏஆர் ரஹ்மான் சாரை தாக்க வேண்டாம்" என ACTC நிறுவனர் ஹேமந்த் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

ஏஆர் ரஹ்மான் சாரை தாக்க வேண்டாம்: இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏஆர் ரஹ்மான், உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இவரது இசை நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடமும் மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னை ஈசிஆர் பகுதியில், ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் நடந்த இந்நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டனர்.
ஆக.12ம் தேதி நடைபெறவிருந்த மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி, கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு, பின்னர் கடந்த 10ம் தேதி நடைபெற்றது. 25000 பேருக்கு மட்டுமே அனுமதி வாங்கிவிட்டு, 40000 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த ரசிகர்கள் ரொம்பவே அவதிப்பட்டனர். ஈசிஆர் பகுதிகள் முழுவதும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. பார்க்கிங் வசதிகளும் சரியாக இல்லாததால், ரசிகர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
மேலும், அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்ததால், நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு செல்ல முடியாமல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விரக்தியோடு வெளியேறினர். நிகழ்ச்சி நடக்கும் மைதானம் உள்ளே சென்றவர்களுக்கும் உட்கார எந்தவிதமான இருக்கை வசதிகளும் இல்லை என சொல்லப்படுகிறது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பலதரப்பினரும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டும் இல்லாமல் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலர் பெண்கள் மீது பாலியல் சீண்டல்களும் செய்துள்ளனர்.
இந்த விவகாரங்கள் கடும் சர்ச்சையானதால், இசை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஏசிடிசி நிறுவனம், இதற்கு பொறுப்பேற்று மன்னிப்பு கோரியது. அதேபோல், ஏஆர் ரஹ்மானும் மன்னிப்புக் கேட்டதோடு, நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் போன ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பித் தரப்படும் எனக் கூறினார். அதன்படி தற்போது டிக்கெட் கட்டணங்கள் திருப்பி வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் தொடர்ந்து ஏஆர் ரஹ்மான் மீதான விமர்சனங்கள் இன்னும் குறைந்ததாக தெரியவில்லை.

இதனையடுத்து ACTC நிறுவனர் ஹேமந்த், மீண்டும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியை நடத்துவதில் மட்டுமே ஏஆர் ரஹ்மான் சாருக்கு பொறுப்பு இருந்தது. அதனை அவர் சிறப்பாகவே நடத்திக் காட்டினார். அவர் மீது எந்த தவறுகளும் கிடையாது. இந்த சர்ச்சைகளுக்கும் அசம்பாவிதங்களுக்கும் முழுக்க முழுக்க ACTC நிறுவனம் தான் காரணம். அதனால், ஏஆர் ரஹ்மான் சாரை யாரும் தாக்க வேண்டாம்" எனக் கேட்டுள்ளார்.
மேலும், "நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் போன ரசிகர்களுக்கு, அவர்களது டிக்கெட் கட்டணங்கள் கண்டிப்பாக திருப்பி கொடுக்கப்படும். ரசிகர்கள் அனைவரிடமும் நானே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இனியும் ஏஆர் ரஹ்மான் சாரை தாக்கி யாரும் சமூக வலைத்தளங்களில் தவறாக பதிவிட வேண்டாம்" என உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார். ACTC நிறுவனர் ஹேமந்த் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











