ஏ.ஆர். ரஹ்மான் முதல் ஜி.வி. பிரகாஷ் வரை இருந்து என்ன பிரயோஜனம்.. அனிருத் இல்லைன்னா அவ்ளோ தானா?
சென்னை: கடந்த 2 மாதங்களில் தமிழ் சினிமாவில் 20 படங்களுக்கு மேல் ரிலீஸ் ஆகி விட்டன. ஆனால், எந்தவொரு படமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய ஹிட் அடிக்கவில்லை என்பது தான் வருத்தமான செய்தி. அட படங்களை விடுங்கப்பா ரசிகர்கள் முணுமுணுத்து சிலிர்க்கிற அளவுக்கு பாடல்கள் கூட பிரம்மாதமா வரலையே என அனிருத் ரசிகர்கள் அடி வெளுக்க ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டு தமிழ் சினிமா மற்ற மொழி படங்களுக்கு டஃப் கொடுத்து வந்த நிலையில், ஜெயிலர் மற்றும் லியோ படங்களின் ஆல்பமும் அந்தளவுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தன. மேலும், பாலிவுட்டில் ஷாருக்கான் நடித்து வெளியான ஜவான் படத்துக்கும் அனிருத் போட்ட பாடல்கள் “வந்த இடம் ஏன் காடு புகுந்து விளையாடு” என மாஸ் காட்டியது.

ஏ.ஆர். ரஹ்மான்: இளையராஜாவையே ஓரங்கட்டி அவரது ட்ரூப்பில் வாசித்து வந்த ஏ.ஆர். ரஹ்மான் ரோஜா படத்தில் அறிமுகமாகி ஆஸ்கர் வரை ஜெய் ஹோ பாடல் மூலம் கெத்துக் காட்டி 2 ஆஸ்கர் விருதுகளை அள்ளினார். கடைசியாக வெந்து தணிந்தது காடு படத்திற்கு அவர் இசையமைத்த அனைத்த பாடல்களுமே “மறக்குமா நெஞ்சம்” ரேஞ்சுக்கு ஹிட் அடித்தன. ஆனால், இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான அயலான் படத்தின் ஆல்பம் மற்றும் பிப்ரவரியில் வெளியான ரஜினிகாந்தின் லால் சலாம் படத்துக்கு அவர் போட்ட பாடல்கள் என எதுவுமே ரசிகர்களை கவரவில்லை.
ஜி.வி. பிரகாஷ்: சிவகார்த்திகேயனின் அயலான் படத்துக்குப் போட்டியாக வெளியான தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். பின்னணி இசை ஓகே ரகமாக இருந்த நிலையில், அந்த படத்திலும் பெரிதாக பாடல்கள் கை கொடுக்கவில்லை. “கோரனாறு” என்கிற பாடல் படத்திற்கு தேவையான ஒன்றாக இருந்ததே தவிர ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாக அமையவில்லை.
கோவிந்த் வசந்தா: இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே ப்ளூ ஸ்டார் படத்தின் பாடல்கள் சற்று கேட்கும் ரகமாகவும் ரசிகர்களை கவர்ந்தும் இருந்தன. ஆனால், அந்த பாடல்கள் அனைத்துமே கடந்த ஆண்டு வெளியான நிலையில், புதிதாக ஹிட் ஆல்பம் வரவில்லையே என்கிற ஏக்கம் இசை ரசிகர்களை தாக்கிக் கொண்டே இருக்கின்றன. ப்ளூ ஸ்டார் திரைப்படமும் பெரிதாக வசூல் வேட்டை நடத்தாத நிலையில், அதன் பாடல்களும் பெரியளவில் ரீச் ஆகவில்லை.
அனிருத் எங்கப்பா காணோம்: ஜெயிலர் படத்திற்கு ”காவாலா”, ”ஹுகும்”, ”ரத்தமாரே”, ”களவாணி கண்ணய்யா” என அனிருத் போட்ட அத்தனை பாடல்களுமே ஒட்டுமொத்த ஆல்பமாக ஹிட் அடித்தன. மேலும், தளபதி விஜய் நடித்த லியோ படத்துக்கு கடந்த ஆண்டு அவர் இசையமைத்த “நான் ரெடிதான் வரவா”, “அன்பெனும் ஆயுதம்”, ”பேட் ஆஸ்” உள்ளிட்ட அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அனிருத் இசையில் ஒரு படம் கூட வரலையே, அனிருத் எங்கேப்பா காணோம் என ரசிகர்களே சோஷியல் மீடியாவில் கேட்க ஆரம்பித்துள்ளனர்.
கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள் வருமா?: இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அந்த படம் எப்போ வரும் என தெரியவில்லை. ஒரே ஒரு அறிமுக பாடல் தான் வந்தது. ஆனால், அதுவும் ரசிகர்களை கவரவில்லை. இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய்யின் கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாவது வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கி உள்ளனர். படங்களில் வெற்றி பெறுவது இருக்கட்டும் முதலில் பாடல்களிலாவது தமிழ் சினிமா தேறுமா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











