என்னிடம் இருப்பது அதுதான்.. காயப்படுத்தும் எண்ணம் இல்லை.. ஏ.ஆர்.ரஹ்மான் அதிரடி பேச்சு
சென்னை: ஆஸ்கர் நாயகன், இசைப்புயல் என கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல விருதுகளை அள்ளியிருக்கும் அவர் கடைசியாக தமிழில் தக் லைஃப், காதலிக்க நேரமில்லை படங்களுக்கு இசையமைத்திருந்தார். இப்போது ஹிந்தியில் ராமாயணம் படத்துக்கும் இசையமைத்துவருகிறார். இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டியை வைத்து ஒருதரப்பினர் அவரை விமர்சித்த சூழலில்; இப்போது விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். இசையமைத்த முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றார். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழில் அவரது மார்க்கெட் உயரத்துக்கு சென்றது. அதேபோல் பாலிவுட்டிலும் வாய்ப்புகள் கிடைத்தன. அங்கும் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கினார் என்றுதான் சொல்ல வேண்டும். கோலிவுட், பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்டுக்கு சென்று ஆஸ்கர், கோல்டன் குளோப் விருதுகளை வென்றார்.
இப்போதைய படங்கள்: அவர் கடைசியாக தமிழில் காதலிக்க நேரமில்லை, தக் லைஃப் ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். இரண்டு படங்களும் தோல்வியடைந்தாலும் அவரது பாடல்களும், பின்னணி இசையும் வெகுவாக கொண்டாடப்பட்டது. அடுத்ததாக உலக புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஜிம்மருடன் சேர்ந்து ஹிந்தியில் உருவாகும் ராமாயணம் படத்துக்கு இசையமைத்துவருகிறார். இது ஐகானிக்கான ஒன்றாக இருக்கும் என அவர் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

சர்ச்சையான பேட்டி: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் இந்தியாவில் நிலவும் சமூக பண்பாடு மற்றும் கலாசாரம் குறித்தெல்லாம் பேசியிருந்தார். மேலும் சாவா படம் பிரிவினையை தூண்டும்படி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அவரது இந்தப் பேட்டி வட மாநிலங்களில் பெரிய விவாதத்தை கிளப்பியது. மேலும் கங்கனா ரணாவத் ஓபனாகவே ரஹ்மானை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
விளக்க வீடியோ: தொடர்ந்து தனக்கு எதிரான கருத்துக்கள் அதிகரித்துவரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார் ரஹ்மான். அந்த வீடியோவில் அவர், "அன்புள்ள நண்பர்களே வணக்கம். இசை என்பது கலாசாரத்துடன் இணைவதற்கும், அதை கொண்டாடுவதற்கும், மரியாதை செலுத்துவதற்கும் பயன்படுத்தும் ஒரு வழி. இந்தியா எப்போதுமே எனது வீடு, எனது ஆசிரியர். எனக்கு உந்துகோலாக இருக்கிறது.
சேவை செய்ய வேண்டும்: சில நேரங்களில் நோக்கங்கள் தவறாக புரிந்துகொள்ளப்படும் என்பதை நான் இப்போது புரிந்துகொண்டேன். இசையின் மூலம் சேவை செய்ய வேண்டும் என்பதே எப்போதும் என்னிடம் இருக்கும் விஷயம். யாரையும் காயப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை. எனது எண்ணம் புரிந்துகொள்ளப்படும் என நம்புகிறேன்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











