ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிலிம்பேர் விருது.. நெகிழ்ச்சியுடன் என்ன சொல்லிருக்காரு பாருங்க
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உலக அளவில் புகழ் பெற்றவர். 90களில் சினிமா துறைக்கு வந்தவர் இன்றளவும் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவரது இசையமைப்பில் ஆடுஜீவிதம் திரைப்படம் வெளியானது. அடுத்ததாக தக் லைஃப், ராயன் உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்துக்காக பிலிம்பேர் விருது பெற்றுக்கொண்ட ரஹ்மான் நெகிழ்ச்சியோடு சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் ரசிகர்களாக இருக்கின்றனர். அவரது இசையை கேட்டுவிட மாட்டோமா, அவரை நேரில் சந்தித்துவிடமாட்டோமா, அவருடன் ஓரிரு வார்த்தைகள் பேசிவிடமாட்டோமா என பலர் தவம் இருக்கின்றனர். அந்த அளவுக்கு தனது இசையாலும் தனது நடவடிக்கையாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஈகோ இல்லாத இசைப்புயல்: இசையமைத்த முதல் படத்திலேயே தேசிய விருது, அதேபோல் கோல்டன் குளோப் விருது, ஆஸ்கர் விருதுகள் என உலகத்தின் புகழுடைய உச்சிக்கு சென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால் அவரது நடவடிக்கையும், பேச்சும் மிக மிக இயல்பாகவே இருக்கும். அதேபோல் எந்த ஈகோவும் காட்டாமல் பழகும் அவர் தனது மனதில் பட்டதை யார் மனதையும் புண்படுத்தாமல் சொல்லும் வித்தையை தெரிந்தவர் என்பதை அவர் பல முறை நிரூபித்திருக்கிறார்.
பிஸி ஏ.ஆர்.ரஹ்மான்: கடந்த வருடம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் சிம்பு நடித்த பத்து தல படம், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்கள், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு நடித்த மாமன்னன் படங்கள் கடந்த வருடம் வெளியாகின. படத்தில் அவரது இசையமைப்பில் உருவான அத்தனை பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னணி இசையும் உயர் தரத்தில் இருந்ததாக ரசிகர்கள் கூறினர்.
பெரியோனே ரகுமானே: இந்த வருடத்தில் அவரது இசையமைப்பில் அயலான் திரைப்படமும், லால் சலாம் திரைப்படமும் வெளியாகின. இரண்டு படங்களில் அயலான் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. கடைசியாக அவரது இசையமைப்பில் ஆடுஜீவிதம் படம் வெளியானது. அதில் ரஹ்மானின் இசை கொண்டாடப்பட்டது. அதிலும் பெரியோனே என் ரகுமானே பாடல் பெரிதும் கவர்ந்தது. அடுத்ததாக தக் லைஃப், ராயன் உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. ராயன் படத்தில் உசுரே நீதானே பாடல்தான் இப்போதைக்கு பெரும்பாலானோரின் ரிங் டோனும், காலர் ட்யூனாகவும் இருக்கிறது.
பிலிம்பேர் விருது: இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிலிம்பேர் விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்துக்காக இந்த விருது அவருக்கு கிடைத்திருக்கிறது. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "அமெரிக்காவில் நான் சுற்றுப்பயணத்தில் இருந்தபோது பொன்னியின் செல்வன் 1 படத்தின் இசையமைப்பிற்கான ஏற்பாடுகள் தொடங்கின. அப்படி தொடங்கிய சில காலத்துக்கு முன்பு நானும், எனது டீமும் ஆராய்ச்சிக்காகவும், இசை கருவிகளை வாங்குவதற்காகவும் பாலிக்கு சென்றிருந்தோம்.
மணிரத்னத்தின் ஆதரவு: மணிரத்னம்தான் அழைத்து சென்றிருந்தார். அங்கு வாங்கிய இசைக்கருவிகளை கொண்டு பல ட்யூன்களை உருவாக்கினோம். மணிரத்னத்திடம் ஒரு தனித்திறமை இருக்கிறது. அதாவது அவரது தேர்ந்தெடுக்கும் இசை தனித்துவமானதாகவும், எதிர்காலத்தில் கொண்டாடப்படக்கூடியதாகவும் இருக்கும். திரைக்கதையுடனும் கச்சிதமாக பொருத்துவார்.மணிரத்னம், லைகா நிறுவனம், எனது டீமில் இருப்பவர்களுக்கு நன்றிகள்" என்று குறிப்பிட்டிருக்கிறார். ரஹ்மான் இதுவரை 30க்கும் மேற்பட்ட பிலிம்பேர் விருதுகளை வாங்கியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications











