AR Rahman: 90 சதவீதம் சக்சஸ்.. 10 சதவீதம் தான் தோல்வி.. ஏ.ஆர். ரஹ்மான் கொடுத்த அடடே விளக்கம்!
சென்னை: மறக்குமா நெஞ்சம் எனும் பெயரில் நேற்று பனையூரில் உள்ள ஆதித்யாராம் பேலஸ் சிட்டியில் நடைபெற்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் நடந்த அசம்பாவிதங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் மனம் வருந்தியுள்ளார்.
30 ஆண்டுகளாக தனது இசையால் ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் சென்னையில் இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு போன முறை மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த முறை அதிக கூட்ட நெரிசல் காரணமாக பெரிய பிரச்சனை வெடித்துள்ளது.

பெண்கள் பாலியல் தாக்குதல்களை சந்தித்ததாகவும் முறையான பாதுகாப்பு இல்லாததே இதற்கு காரணம் என பொதுமக்கள் விளாசி வரும் நிலையில், பணத்தை திருப்பி தருகிறேன் என ஏ.ஆர். ரஹ்மான் தற்போது பதிவிட்டுள்ளார்.
90 சதவீதம் சக்சஸ்: மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி 90 சதவீதம் சக்சஸ் அடைந்துள்ளதாகவும் வெறும் 10 சதவீதம் தான் தோல்வியை சந்தித்து இருப்பதாக பேட்டி ஒன்றில் ஏ.ஆர். ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார். நிகழ்ச்சிக்கு உள்ளே வந்தவர்கள் பல ஆயிரக் கணக்கான மக்கள் ஆரவாரம் செய்து கொண்டாடினர் என்றும் கூட்ட நெரிசலில் உள்ளே வர முடியாமல் திரும்பி சென்றவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார். 46 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டு நடந்த இசை நிகழ்ச்சிக்கு சுமார் ஒரு லட்சத்துக்கும் மேலான ரசிகர்கள் திரண்டு வந்தது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்கின்றனர்.

ரொம்ப கஷ்டமா இருக்கு: என்னை நம்பி என் இசை நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்கள் இவ்ளோ கஷ்டப்பட்டு இருக்காங்க என அறிந்த உடனே ரொம்பவே மனவேதனை அடைந்தேன். நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிவிட்டு பார்க்க முடியாமல் திரும்பியவர்கள் டிக்கெட் நகலை எடுத்து மெயில் பண்ணுங்க நிச்சயம் பணம் திரும்ப கிடைக்கும் என ரஹ்மான் உறுதி அளித்துள்ளார்.
மகனுக்கு அட்வைஸ்: என் மகன் ஏ.ஆர். அமீன் கிட்ட எப்போதுமே இதைத்தான் சொல்வேன். நாம ஒருத்தங்களோட பார்ட்னர்ஷிப் வைத்துக் கொண்டு நிகழ்ச்சி நடத்தினால், அதில் ஏதாவது பிரச்சனை வந்தா பார்ட்னர்ஷிப் வைத்தவர்களை மக்கள் கேள்வி கேட்க மாட்டாங்க.. நம்மைத் தான் கேள்வி கேட்பாங்க.. மேலும், பார்ட்னர்ஷிப் வைத்தவர்கள் காணாமல் போயிடுவாங்கன்னு சொல்வேன் என்றும் அந்த பேட்டியில் ஏ.ஆர். ரஹ்மான் துரதிர்ஷ்டவசமாக இப்படியொரு அசம்பாவிதம் நடைபெற்று விட்டதாகவும் அதற்கு தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











