ARRahman: AR ரஹ்மான் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் சொதப்பல்... பணத்தை திருப்பிக் கேட்கும் ரசிகர்கள்
சென்னை: இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் உலகம் முழுவதும் தனது இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
அந்த வரிசையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நேற்று சென்னையில் அவரது இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் நடந்த இசை நிகழ்ச்சி ஏஆர் ரஹ்மான் ரசிகர்களை கதறவிட்டுள்ளது.

சரியான திட்டமிடல் இல்லாமல் ஏற்பாடு செய்யப்பட்டதால், ரசிகர்கள் விரக்தியுடன் வெளியேறியுள்ளனர்.
ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியால் ரசிகர்கள் வேதனை: ரோஜா திரைப்படம் மூலம் அறிமுகமான ஏஆர் ரஹ்மான், திரையுலகில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கொடி கட்டி பறந்து வருகிறார். தேசிய விருதுகள் முதல் ஆஸ்கர் வரை சர்வதேச அளவிலும் மிக பிரலமான இசைப்புயல், ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். அதேநேரம் உலகம் முழுவதும் பல பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

வேறு எந்த இசையமைப்பாளர்களுக்கும் கூடாத மக்கள் கூட்டம், ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி என்றால் மழை, வெயிலை கூட பார்க்காமல் திரண்டு வந்துவிடும். அப்படித்தான் நேற்றைய ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெறவிருந்த இந்த இசை நிகழ்ச்சி, கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, நேற்று மாலை சென்னை ஈசிஆர் பகுதியில் ஏஆர் ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இயக்குநர் மணிரத்னம் குடும்பத்தினர், நடிகர் அஜித்தின் குடும்பத்தினர் உட்பட ஏராளமான பிரபலங்கள் இதில் கலந்துகொண்டனர். ஆனால், ரசிகர்களுக்கு சரியான ஏற்பாடுகள் செய்யப்படாததால், மொத்த நிகழ்ச்சியும் சொதப்பிவிட்டது. ஏற்கனவே எடுத்திருந்த டிக்கெட்டுகள் செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், அதனை நம்பி ரசிகர்கள் சென்றுள்ளனர். ஆனால் அங்கே அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்ததால், பாதிக்கும் மேற்பட்ட ரசிகர்களால் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கே செல்ல முடியவில்லையாம்.
அப்படியும் உள்ளே சென்றவர்களுக்கு உட்கார எந்தவிதமான இருக்கை வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. இதனால், நீண்ட நேரம் நிற்க முடியாமல் பாதியிலேயே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினர் ரசிகர்கள். மேலும், பார்க்கிங் வசதியும் சரியாக செய்யவில்லை என்பதால், ஈசிஆர் சாலை முழுவதும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றவர்கள் மட்டும் இல்லாமல், அப்பகுதியை கடந்துசென்ற பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

700க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தும், வாகன நெரிசலை சமாளிக்க முடியாமல் ஈசிஆர் ஸ்தம்பித்துள்ளது. இன்னொரு பக்கம் இசை நிகழ்ச்சியை பார்க்கமுடியாத விரக்தியில், டிக்கெட் பணத்தை திருப்பிக் கேட்டு ரசிகர்கள் ஆக்ரோஷம் அடைந்தனர். ஏஆர் ரஹ்மான் இப்படி செய்யலாமா, அவரது இசை நிகழ்ச்சிக்காக பெங்களூரு, மதுரை, கோவை என பல பகுதிகளில் இருந்து வந்த ரசிகர்களை அவர் ஏமாற்றிவிட்டார். எங்கள் பணம் மொத்தமாக போய்விட்டது என கொந்தளித்தனர்.
ஒரு டிக்கெட்டின் விலை குறைந்தது 2000 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. 2000, 5000, 10000 என அதிக விலை கொடுத்து டிக்கெட்டுகள் வாங்கியும், எல்லா பணமும் வேஸ்ட் என ரசிகர்கள் புலம்பித் தீர்த்துள்ளனர். ஏஆர் ரஹ்மானும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களும் இதற்காக பதில் சொல்லியே ஆக வேண்டும் என அவர்கள் குரல் எழுப்பியது கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி மறக்காத நெஞ்சம் அளவிற்கு மோசமான அனுபவத்தை கொடுத்துவிட்டதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











