'மெர்சல்' ரிலீஸுக்கு பிறகு ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் ட்வீட்!
சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பல தடைகள் கடந்து தீபாவளியன்று வெளியானது 'மெர்சல்' திரைப்படம். இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
விஜய், ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரின் சினிமா பயணத்தில் இது 25-வது வருடம். இந்த வருடத்தில் வெளியான 'மெர்சல்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இவர்களது 25-வது வருடத்திற்கு நிறைய பிரபலங்கள் வாழ்த்துக் கூறியிருந்தனர்.
திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவைப் பெற்று வருகிறது. இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் மெர்சல் படத்தையும், பாடல்களையும் பெரிய ஹிட்டாக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான்
தான் இசையமைக்கும் படங்களின் ப்ரொமோஷனில் எப்போதும் அதிகம் கவனம் செலுத்தாதவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது இசையில் வெளிவந்துள்ள 'மெர்சல்' படத்தின் இசையைப் பற்றி படத்தின் இசை வெளியான நாளிலிருந்தே பேசி வருகிறார்கள்.

ரசிகர்கள் கொண்டாட்டம்
அரசியல் கலந்த வார்த்தைகளுடன் இடம் பெற்ற 'ஆளப் போறான் தமிழன்' பாடல் விஜய்க்கு வேறு ஒரு இமேஜை வழங்கியது. அந்த இமேஜ் இப்போது படத்தின் மூலமும் ஏற்பட்டுள்ளது. விஜய் பேசும் அரசியல் வசனங்களும் கவனிக்கப்பட்டு வருகின்றன.

ரெண்டு பாடல்கள் செம்ம
'ஆளப் போறான் தமிழன்' பாடல், 'நீதானே நீதானே...' பாடல் தவிர வேறு எந்தப் பாடலும் படத்தில் ஒட்டவில்லை என்ற கருத்தும் விமர்சனங்களில் அதிகம் பார்க்க முடிகிறது.
நன்றி தெரிவித்த ரஹ்மான்
தனது ரசிகர்களுக்கு நேற்று தீபாவளி வாழ்த்துகளைச் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான், 'மெர்சல்' படத்தின் வெற்றிக்கும், படத்தின் இசையின் மிகப்பெரிய வெற்றிக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் பதிவு செய்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











