ஏ.ஆர்.ரஹ்மான் தமிழணங்கே போட்டது இதற்காகத்தானா? சமூக வலைதளத்தில் விவாதத்தை கிளப்பிய நெட்டிசன்கள்!
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென "தமிழணங்கு" என அழகிய தமிழ் அன்னையின் ஓவியம் அடங்கிய ஒரு போஸ்ட்டை ஷேர் செய்துள்ளார்.
இந்தியை அலுவல் மொழியாக திணிக்க பாஜக தலைவர் அமித்ஷா கூறிய கருத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் தமிழ் அன்னையின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளது அமித்ஷாவுக்கு அவர் கொடுத்துள்ள பதிலடி என விவாதங்கள் கிளம்பி உள்ளன.

தமிழணங்கு
இன்ஸ்டாகிராமில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாரதிதாசன் வரிகள் அடங்கிய அழகான தமிழ் அன்னையின் ஓவியத்துடன் "தமிழணங்கு" எனும் வார்த்தை அடங்கிய புகைப்படத்தை பதிவிட்டு ஒட்டுமொத்த தமிழர்களின் கவனத்தையும் தன் பக்கம் திசை திருப்பி உள்ளார். சமீபத்தில் மூப்பில்லா தமிழ்த் தாயே எனும் ஆல்பம் பாடலையும் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டு இருந்தார்.

ஆஸ்கர் மேடையில் தமிழ்
ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித் அறைந்தது எந்த அளவுக்கு டிரெண்டிங் ஆனதோ, அதே அளவுக்கு ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்காக இரு ஆஸ்கர் விருதுகளை அள்ளிய முதல் தமிழனாக ஏ.ஆர். ரஹ்மான் அந்த மேடையில் நின்று கொண்டு "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என தமிழில் பேசி ஆஸ்கர் மேடையில் தமிழை ஒலிக்கச் செய்தார்.

செம்மொழியான தமிழ் மொழியாம்
மு. கருணாநிதி வரிகளில் உருவான செம்மொழியான தமிழ் மொழியாம் எனும் பாடலை ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து பல பிரபல பின்னணி பாடகர்களை பாட வைத்திருந்தார். கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான அந்த வீடியோ பாடல் மிகப்பெரிய வரவேற்பை உலக தமிழர்கள் நெஞ்சங்களில் பெற்றது.

மூப்பில்லா தமிழ்த் தாயே
பாடலாசிரியர் தாமரை வரிகளில் இயக்குநர் அமித் கிருஷ்ணா இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து பாடிய மூப்பில்லா தமிழ்த் தாயே பாடல் கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக துபாயில் நடந்த எக்ஸ்போ 2020 நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டு வேற லெவலில் வைரலானது. தொடர்ந்து தமிழ் மொழிக்காக ஏ.ஆர். ரஹ்மான் அட்டகாசமான பாடல்களை கொடுத்து வருகிறார்.

அமித்ஷாவிற்கு பதிலடியா
இந்தியாவில் உள்ள மற்ற மொழிகளை இருட்டடிப்பு செய்து விட்டு இந்தியை மட்டுமே ஆட்சி மொழியாகவும் அலுவல் மொழியாகவும் மாற்ற வேண்டும் என்பதை வெளிப்படையாக அமித்ஷா தெரிவித்ததற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ் அன்னையின் சிறப்பை உணர்த்தும் வகையில் இப்படியொரு போஸ்ட்டை போட்டு அமித்ஷாவிற்கு அமைதியான முறையில் பதிலடி கொடுத்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விவாதம் நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











