AR Rahman Networth: டாப் ஹீரோக்களுக்கு சவால் விடும் AR ரஹ்மான்... மலைக்க வைக்கும் சொத்து மதிப்பு!
சென்னை: 1992ம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏஆர் ரஹ்மான். கடந்த 31 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போதும் பிஸியாக இசையமைத்து வரும் ஏஆர் ரஹ்மான், இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து அவருக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
ஏஆர் ரஹ்மான் நெட்வொர்த்
இசைப்புயல், மொசார்ட் ஆஃப் சென்னை, ஆஸ்கர் நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஏஆர் ரஹ்மான் இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரோஜா படம் மூலம் கோலிவுட்டில் தொடங்கிய ரஹ்மானின் இசை பயணம், பாலிவுட், டோலிவுட், மல்லுவுட், ஹாலிவுட் என உலகம் முழுவதும் பரந்துவிரிந்துள்ளது. விளம்பரங்களுக்கு இசையமைக்கத் தொடங்கிய ஏஆர் ரஹ்மான், மணிரத்னம் மூலம் இசையமைப்பாளர் ஆனார்.

அதேபோல் முதல் படத்திலேயே தேசிய விருது வென்ற ஏஆர் ரஹ்மான், இதுவரை 6 தேசிய விருதுகளை வென்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட ஃபிலிம்ஃபேர் விருதுகள், 2 ஆஸ்கர் விருதுகள், கிராமி அவார்ட், பாஃப்டா உட்பட உலகம் முழுவதும் ஏராளமான சர்வதேச விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார். படங்களுக்கு மட்டுமல்லாம் பாம்பே ட்ரீம்ஸ் போன்ற மேடை நாடகங்களுக்கும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். அதேபோல், வந்தே மாதரம் உள்ளிட்ட பல பிரபலமான ஆல்பங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று 57வது பிறந்தநாள் கொண்டாடும் ஏஆர் ரஹ்மானுக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 31 ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர் 1 இசையமைப்பாளராக வலம் வரும் ஏஆர் ரஹ்மான், சொத்து மதிப்பிலும் டாப் ஹீரோக்களுக்கு சவால் விடுகிறார். சென்னை கோடம்பாக்கத்தில் பிரம்மாண்டமான வீடு, ஸ்டூடியோ வைத்திருக்கிறார் ஏஆர் ரஹ்மான். சென்னையில் இருக்கும் இந்த ஸ்டூடியோவில் பல கோடி மதிப்புடைய கம்ப்யூட்டர், மியூசிக் அரேஞ்மெண்ட்ஸ் வைத்திருக்கிறாராம். இது இந்தியாவில் வேறு யாரிடமும் இல்லை என சொல்லப்படுகிறது.
அதேபோல், சென்னை பூந்தமல்லி பகுதியில் சொந்தமாக இசைப் பள்ளி வைத்து நடத்தும் ஏஆர் ரஹ்மான், அங்கேயும் பிரம்மாண்டமான ஸ்டுடியோ வைத்துள்ளார். இதுதவிர மும்பை, லண்டன், அமெரிக்காவிலும் ஏஆர் ரஹ்மானுக்கு சொந்தமான அதிநவீன ஸ்டுடியோக்கள் இருக்கின்றன. சமீபத்தில் அவர் துபாயில் ஃபிர்தெளஸ் என்ற ஹைடெக் ஸ்டுடியோ ஒன்றை திறந்துள்ளார். அதன் மதிப்பும் பல கோடிகளுக்கு மேல் இருக்குமாம்.
மேலும், ஒரு படத்திற்கு 8 முதல் 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம். அதேபோல் மேடை நிகழ்ச்சிகள் என்றால் ஒரு மணி நேரத்திற்கு 2 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. அதன்படி மாதம் 3 முதல் 4 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டும் ஏஆர் ரஹ்மான், ஆண்டுக்கு 50 முதல் 60 கோடி வரை சம்பாதிக்கிறாராம். கார்கள் மீதும் அதிக ஆர்வமுள்ள ஏஆர் ரஹ்மான், ஆடி, BMW, வால்வோ, பென்ஸ் உள்ளிட்ட சொகுசு கார்களை சொந்தமாக வைத்துள்ளார். ஆகமொத்தம் அவரது சொத்து மதிப்பு மட்டுமே 1500 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் உச்ச நட்சத்திரங்களுக்கே சவால் விடுகிறார் ஏஆர் ரஹ்மான்.


Click it and Unblock the Notifications











