ஆஸ்கார் விருதுகளை தொலைத்து, மீண்டும் பெற்றேன்... ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன 'பகீர்' தகவல்
சென்னை : இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றை 2009 ம் ஆண்டு படைத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். அதுவும் ஒரே மேடையில், ஒரே படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை அவர் பெற்றார்.
ஸ்லம்டாக் மில்லினர் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. ஒன்று அந்த படத்தின் பின்னணி இசைக்காக. மற்றொரு விருது, உலக அளவில் மிகப் பெரிய அளவில் பிரபலமான அதே படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ பாடலுக்கு இசை அமைத்ததற்காக.

ரஹ்மான் சொன்ன அதிர்ச்சி தகவல்
உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான், தான் ஆஸ்கார் விருதுகளை தொலைத்து விட்டு, பிறகு மீண்டும் பெற்றதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட இந்த ரகசிய தகவல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அம்மா பாதுகாத்த விருது
சமீபத்தில் பேட்டி ஒன்றில் இதனை கூறிய ஏ.ஆர்.ரஹ்மான், எப்படி ஆஸ்கார் விருது தொலைந்தது, பிறகு எவ்வாறு கிடைத்தது என்ற கதையையும் விளக்கமாக கூறி உள்ளார். அவர் கூறுகையில், எனது அம்மா தான் ஆஸ்கார் விருதுகளை பத்திரமாக ஒரு துணியில் சுற்றி, அலமாரி ஒன்றில் வைத்திருந்தார். நான் அதை வாங்கியது முதல் அது தங்கத்தால் செய்யப்பட்டது என்றே அவர் நினைத்திருந்தார்.

மறந்து போன விருதுகள்
அம்மாவிடம் ஒப்படைத்த பிறகு பல ஆண்டுகள் அந்த விருதை பற்றி நான் நினைக்கவேயில்லை. சமீபமாக அம்மா இறக்கும் வரை நான் அதை பற்றி நினைக்கவேயில்லை. 2020 டிசம்பரில் அம்மா கரீமா பேகம் காலமானார். அதனால் அம்மா வீட்டில் இருந்த ஆஸ்கார் விருதுகளை எனது வீட்டிற்கு எடுத்து வந்து விடலாம் என நினைத்தேன்.

தொலைந்து, மீண்டும் கிடைத்தது எப்படி
ஆனால் அம்மா வைத்திருந்ததாக நான் நினைத்துக் கொண்டிருந்த அந்த அலமாரியில் விருதுகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நான், பல இடங்களில் தேடி பிறகு, கடைசியாக விருதுகளை தொலைத்து விட்டோம் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். அப்போது எனது மகன் ஏ.ஆர்.அமீன், அந்த விருதுகள் மற்றொரு அலமாரியில் வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து என்னிடம் கொண்டு வந்து கொடுத்தான் என்றார்.


Click it and Unblock the Notifications











