AR Rahman: ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் டிக்கெட் மோசடி... வெளியானது அதிர்ச்சியான உண்மைகள்!!
சென்னை: ஏஆர் ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சென்னை, ஈசிஆர் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சரியான ஏற்பாடுகள் செய்யப்படாததால் ரசிகர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் விரக்தியுடன் வெளியேறினர்.
இந்நிலையில், மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் டிக்கெட் மோசடி நடந்துள்ளதாக சில அதிர்ச்சியான உண்மைகள் தெரியவந்துள்ளன.

ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் டிக்கெட் மோசடி: இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஏஆர் ரஹ்மான் மிக முக்கியமானவர். ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஏஆர் ரஹ்மான், உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அந்த வரிசையில் சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த (ஆக.12) மாதம் நடைபெறவிருந்த மறக்குமா நெஞ்சம் என்ற இந்த இசை நிகழ்ச்சி, கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, ஞாயிற்றுக் கிழமையான கடந்த 10ம் தேதி சென்னை ஈசிஆர் பகுதியில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இயக்குநர் மணிரத்னம் அவரது குடும்பத்தினர், நடிகர் அஜித்தின் குடும்பத்தினர் உட்பட ஏராளமான பிரபலங்கள் இதில் கலந்துகொண்டனர். ஆனால், ரசிகர்களுக்கு சரியான ஏற்பாடுகள் செய்யப்படாததால் மறக்குமா நெஞ்சம், மறக்காத நெஞ்சம் நிகழ்ச்சியானது.

ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெறவிருந்த நிகழ்ச்சிக்காக எடுத்திருந்த டிக்கெட்டுகள் செல்லும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் அதனை நம்பி ரசிகர்கள் சென்றுள்ளனர். ஆனால் அங்கே அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்ததால், நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு செல்ல முடியாமல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விரக்தியோடு வெளியேறினர். அப்படியும் உள்ளே சென்றவர்களுக்கு உட்கார எந்தவிதமான இருக்கை வசதிகளும் இல்லை என சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் பார்க்கிங் வசதி இல்லாததால், ட்ராஃபிக் ஜாம் ஏற்பட்டது.
700க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தும், வாகன நெரிசலை சமாளிக்க முடியாமல் ஈசிஆர் ஸ்தம்பித்தது. ஒருகட்டத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் வாகனமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இந்த நிகழ்ச்சி கடும் சர்ச்சையான நிலையில், ஏஆர் ரஹ்மான் தானே எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் போன ரசிகர்களுக்கு டிக்கெட் பணம் முழுமையாக திருப்பி அளிக்கப்படும் என அறிவித்தார்.
ஆனாலும், ரசிகர்கள் தொடர்ந்து ஏஆர் ரஹ்மானுக்கு எதிராகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு எதிராகவும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் திரையுலக பிரபலங்கள் ஏஆர் ரஹ்மானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதனிடையே இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், நிகழ்ச்சியில் 25000 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால், அங்கே 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் திரண்டதால் பாதுகாப்பு பணியில் சிரமம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும், இசை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஏசிடிசி நிறுவனம், தன்னார்வலர்களாக கல்லூரி மாணவர்களை நியமித்ததும் தெரியவந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் அவர்களுக்கு போதிய பயிற்சிகளும் வழங்கவில்லையாம். அதேபோல், 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே போலீஸாரிடம் அனுமதி வாங்கிய ஏசிடிசி நிறுவனம், 40000 டிக்கெட்டுகள் வரை விற்பனை செய்துள்ளது. இதனால் போலீஸ் பாதுகாப்பில் குளறுபடிகள் ஏற்பட்டதுடன், இருக்கை வசதி இல்லாமலும் ரசிகர்கள் அவதிப்பட்டுள்ளனர்.
அதேபோல், மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி நடந்த மைதானமும், 25000 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ளக்கூடிய அளவிற்கானது என தெரியவந்துள்ளது. சரியான எண்ணிக்கையிலான டிக்கெட்டுகளை விட, அதிக டிக்கெட்டுகளை விற்பனை செய்து ஏசிடிசி நிறுவனம் மோசடி செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இந்த உண்மையை நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களே ஒப்புக்கொண்டதால், பிரச்சினை இன்னும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











