எந்திரனை பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான்.. இன்ஸ்டாவில் வெளியிட்ட ட்ரெண்டிங் வீடியோ.. மனுஷன் குதூகலம் ஆகிட்டாரே
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உலக அளவில் புகழ் பெற்றவர். 90களில் சினிமா துறைக்கு வந்தவர் இன்றளவும் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவரது இசையமைப்பில் லால் சலாம் திரைப்படம் வெளியானது. படமும் சுமார்தான், ரஹ்மானின் இசையும் சுமார்தான் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். இந்தச் சூழலில் அமெரிக்காவுக்கு சென்றிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ட்ரெண்டாகியுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் ரசிகர்களாக இருக்கின்றனர். அவரது இசையை கேட்டுவிட மாட்டோமா, அவரை நேரில் சந்தித்துவிடமாட்டோமா, அவருடன் ஓரிரு வார்த்தைகள் பேசிவிடமாட்டோமா என பலர் தவம் இருக்கின்றனர். அந்த அளவுக்கு தனது இசையாலும் தனது நடவடிக்கையாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஈகோ இல்லாத இசைப்புயல்: இசையமைத்த முதல் படத்திலேயே தேசிய விருது, அதேபோல் கோல்டன் குளோப் விருது, ஆஸ்கர் விருதுகள் என உலகத்தின் புகழுடைய உச்சிக்கு சென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால் அவரது நடவடிக்கையும், பேச்சும் மிக மிக இயல்பாகவே இருக்கும். அதேபோல் எந்த ஈகோவும் காட்டாமல் பழகும் அவர் தனது மனதில் பட்டதை யார் மனதையும் புண்படுத்தாமல் சொல்லும் வித்தையை தெரிந்தவர் என்பதை அவர் பல முறை நிரூபித்திருக்கிறார்.
பிஸி ஏ.ஆர்.ரஹ்மான்: ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் சிம்பு நடித்த பத்து தல படம், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்கள், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு நடித்த மாமன்னன் படங்கள் கடந்த வருடம் வெளியாகின. படத்தில் அவரது இசையமைப்பில் உருவான அத்தனை பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. பின்னணி இசையும் உயர் தரத்தில் இருந்ததாக ரசிகர்கள் கூறினர்.

மாமன்னன் ரஹ்மான்: இந்த வருடத்தில் அவரது இசையமைப்பில் அயலான் திரைப்படமும், லால் சலாம் திரைப்படமும் வெளியாகின. இரண்டு படங்களில் அயலான் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. ஆனால் லால் சலாம் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக லால் சலாம் படத்தின் இசையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்று ரசிகர்கள் ஓபனாகவே பேச ஆரம்பித்தனர். இருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் கண்டிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் இசை பேசுபொருளாக மாறும் என்று அவரது ரசிகர்கள் இருக்கின்றனர். அடுத்தாக அவரது இசையமைப்பில் ஆடுஜீவிதம் படம் வெளியாகவிருக்கிறது.
அமெரிக்காவில் ஏ.ஆர்.ரஹ்மான்: இசைப்புயல் இப்போது அமெரிக்காவில் மையம் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிகாவின் லாஸ் வேகாஸில் இசை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கான கோள வடிவ அரங்கம் திறக்கப்பட்டிருக்கிறது. அங்கு ரோபோக்கள் உள்ளிட்ட விஷயங்கள் இடம்பெற்றிருக்கின்றனர். அந்த அரங்கத்துக்குத்தான் ஏ.ஆர்.ரஹ்மான் சென்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
எந்திரனை சந்தித்த ஏ.ஆர்.ரஹ்மான்: அதாவது அங்கு மனிதர்களுடன் உரையாடும் ரோபோவை பார்த்த ரஹ்மான் அதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "கடைசியாக மனிதர்களுடன் உரையாடும் ரோபோவை கண்டறிந்துவிட்டேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த வீடியோவோடு எந்திரன் படத்துக்காக ரஹ்மான் இசையமைத்த இரும்பிலே ஒரு இருதயம் முளைத்ததே பாடலும் இடம்பெற்றிருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து ட்ரெண்டாக்கிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











