கத்துக்கணும்யா ரஹ்மானிடம் இருந்து இதை கத்துக்கணும் #HappyBirthdayARRahman
சென்னை: இன்று 52வது பிறந்தநாள் கொண்டாடும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகிறது.
9 வயதில் தந்தையை இழந்த ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்தின் வறுமையால் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இளம் வயதிலேயே குடும்ப பாரத்தை சுமந்தார்.
விளம்பர படங்களுக்கு இசையமைத்த ரஹ்மானுக்கு மணிரத்னம் தனது ரோஜா படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

ரோஜா
மணிரத்னம் படத்தில் யாரோ ஒரு சின்னப்பையன் இசையமைக்கிறாராம் என்று அப்பொழுது பேசப்பட்டது. அந்த சின்னப் பையன் ரஹ்மான் இசையில் வெளியான அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்டானது. யாருடா இந்த பையன் என்று அனைவரையும் தன்னை பார்க்க வைத்தார் அவர்.

சூப்பர் ஹிட்
ரோஜா படத்தை அடுத்து ரஹ்மான் பிசியான இசையமைப்பாளர் ஆனார். தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்து அசத்தினார். சந்தோஷம் என்றாலும் ரஹ்மான், துக்கம் என்றாலும் ரஹ்மான் பாடல்கள் தான் என்று மக்கள் மாறும் அளவுக்கு பல தரப்பட்ட இசையை கொடுத்து அசத்தினார். ரஹ்மான் இசையில் பாடல்களை கேட்கும்போது காதில் தேன் வந்து பாயுது என்று சொல்ல வைத்தார்.

ஆஸ்கர்
பாலிவுட்டும், ஹாலிவுட்டும் ரஹ்மான் தங்கள் வீட்டுப் பிள்ளை போன்று பார்த்தது. விருதுகளை அள்ளிக் குவித்தார். ஒரு ஆஸ்கர் விருது கிடைக்காதா என்று தமிழ் திரையுலகினர் ஏங்கிய நிலையில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கிய தங்கத் தமிழன் ரஹ்மான். அவர் ஆஸ்கர் வாங்கியபோது அவரை விட அவரின் ரசிகர்கள் தான் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மதிப்பு
எவ்வளவு பெரிய உயரத்தை தொட்டாலும் தலைக்கனம் இல்லாதவர் ரஹ்மான். மேடைகளில் பேசும்போது எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று அடக்கமாக பேசுவார். அவரின் இந்த அடக்கம் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. பலரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு சாதித்துள்ள போதிலும் அதை எல்லாம் யாரோ செய்தது போன்று அமைதியாக, தன்னடக்கத்துடன் இருக்கிறார் ரஹ்மான். அது தான் அவரிடம் ஸ்பெஷல்.

டிரெண்ட்
திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் ட்விட்டரில் ரஹ்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் #HappyBirthdayARRahman #HBDARRahman ஆகிய ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் தேசிய அளவில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











