ஏ.ஆர்.ரஹ்மான் - வைரமுத்து.. வானும் நீலமும் பிரிவை மறந்து மீண்டும் சேருமா?.. ‘காதல் கடிதம்’ தீட்டுமா?
சென்னை: ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த எத்தனையோ பாடல்கள் அனைவருக்கும் ஃபேவரைட்டாக இருக்கும். அந்த லிஸ்ட்டில் முக்கியமானது 'காதல் கடிதம் தீட்டவே' பாடல். ஜோடி படத்தில் பிரசாந்த், சிம்ரனின் அசரவைக்கும் கெமிஸ்ட்ரியில், வைரமுத்துவின் எழுத்தில், ரஹ்மான் அப்படியே அனைவரையும் வேறு கிரகத்துக்கு அழைத்து சென்றிருப்பார். இன்னும் பல தலைமுறைகளுக்கு அந்தப் பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
காதல் பாடல்களுக்கு எப்போதுமே இசை ரசிகர்களிடம் தனி இடம் உண்டு. தங்கள் மனதில் தோன்றிய காதலை தான் காதலிக்கும் காதலியிடம் சொல்ல முடியாமல் தவிக்கும்போதும் சரி, சொன்ன பிறகு வாழும் வாழ்க்கையிலும் சரி அவர்களுக்கு பாடலே துணை. அந்தப் பாடலின் இசை, வரிகளை எல்லாம் பிய்த்து போட்டு தன்னுடைய ஒவ்வொரு சூழ்நிலைக்கும் பொருத்தி பார்த்து இன்பம் அடையும் பலர் இங்கே உண்டு. அப்படி ஒரு காதல் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் ஜோடி படத்தில் கொடுத்திருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் ஜோடி: இப்போது சென்சேஷனலாக இருக்கும் திரிஷா சின்ன ரோலில் அறிமுகமான படம். இப்போது சோஷியல் மீடியாக்களில், கொடுக்கும் பேட்டிகளில் ட்ரோல் மெட்டீரியலாக மாறும் பிரவீன் காந்தி இயக்கிய படம். அப்போது டாப்பில் இருந்த டாப் ஸ்டார் பிரசாந்த் ஹீரோவாகவும், ஸ்லிம் பியூட்டி சிம்ரன் ஹீரோயினாகவும் கலக்கிய படம். கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. படத்தின் ஹிட்டுக்கு முக்கியமான காரணங்கள் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும், வைரமுத்துவின் பாடல் வரிகளும். கதைக்களத்தை பொறுத்தவரை சாதாரணமான ஒன்றுதான்.
அசரடிக்கும் பாடல்கள்: படத்தில் இடம்பெற்ற, 'வெள்ளி மலரே', 'கை தட்டி தட்டி அழைத்தாளே', 'அஞ்சாதே ஜீவா', 'ஒரு பொய்யாவது சொல் கண்ணே', 'காதல் கடிதம் தீட்டவே' ஆகிய ஐந்து பாடல்களும் ஐந்து காதல் காப்பியங்கள். இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் பிரவாகம் எடுக்க; வைரமுத்து தன் பங்குக்கு பலத்தை காட்டி இசையோட்டத்துக்கு உயிர் கொடுத்திருப்பார். அனைத்துமே காதல் பாடல்கள்தான் என்றாலும் ட்யூனிலும் சரி, வரிகளிலும் சரி பல வித்தைகளை காட்டியிருப்பார்கள்.
காதல் கடிதம் தீட்டவே: முக்கியமாக காதல் கடிதம் தீட்டவே பாடல் பிரமாண்டத்தின் உச்சம். பாடலின் பல்லவியை ரொம்பவே சிம்ப்பிளான ட்யூனோடு ரஹ்மான் ஆரம்பித்திருந்தாலும் அதில் வைரமுத்து, 'காதல் கடிதம் தீட்டவே அந்த மேகம் எல்லாம் காகிதம்.. வானின் நீலம் கொண்டு வா' என ஆரம்பித்து சந்திரன், சூரியனை அஞ்சல் காரர்களாக அழைத்து வந்து நம் பக்கத்தில் அமர வைத்து இரவு, பகலாக ரசிக்க வைத்திருப்பார். அந்த பிரமாண்ட வரிகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் எந்த அலட்டலும் இல்லாமல் இசையமைத்து சைலெண்ட்டாக ஸ்கோர் செய்திருப்பார்.
காதலர்களின் ஃபேவரைட்: அந்தப் பாடல் வெளியாகி கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. ஆனால் இப்போதைய ஜென் ஸி தலைமுறையினர் இந்தப் பாடலை கேட்டாலும் பரபரக்கிற இந்த உலகத்தில் அமைதியாக தன் காதலியோடு பறந்துகொண்டிருப்பார்கள். இந்தப் பாடல் முதலில் ஜோடி படத்தில் இடம்பெற்றது என்றுதான் பெரும்பாலானோர் அறிவார்கள். ஆனால் இதனை அதற்கும் முன்னதாகவே ஹிந்தியில் வெளியான, Doli Saja Ke Rakhna என்ற படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் ரஹ்மான்.
நம்ம ஜோதிகாதான் ஹீரோயின்: அந்தப் படத்தில் ஜோதிகா ஹீரோயினாக நடிக்க; துரந்தர் படத்தில் ரஹ்மான் டெக்கிட் என்ற கேரக்டரில் நடித்து இப்போதைய தலைமுறையினரிடம் ஃபேமஸாகியிருக்கும் அக்ஷய் கண்ணாதான் ஹீரோவாக நடித்திருந்தார். படம் தசுமாரான வரவேற்பை பெற்றிருந்தாலும்; ரஹ்மானின் இந்தப் பாடலோடு சேர்த்து மற்ற பாடல்களும் ரசிகர்களை கவர படத்துக்கு வெளிச்சம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

ரஹ்மான் செய்த செய்கை: ஏ.ஆர்.ரஹ்மான் எப்போதும் சில மரபுகளை உடைக்கக்கூடியவர். ஏற்கனவே தான் இசையமைத்த ஒரு ட்யூனை இன்னொரு முறை பயன்படுத்தினால் ரசிகர்களிடம் பெயர் கெட்டுவிடுமோ என்று சில இசையமைப்பாளர்கள் அஞ்சுவார்கள். அதுவும் 90களில் அப்படி செய்வது அரிதிலும் அரிது. அதனை ரஹ்மான் செய்து காட்டினார். ரோஜா படத்தில் அமைத்த ஒரு இசை துணுக்கை; இந்தியன் படத்தில் 'டெலிஃபோன் மணி போல் சிரித்தவள் இவளா' பாடலில் பயன்படுத்தி அதனையும் அனைவரையும் முணுமுணுக்க வைத்திருப்பார்.
நல்ல நோக்கம்: குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மானை பொறுத்தவரை தமிழ் மீது பெரிய பற்று உண்டு. அவரது பற்றுக்கு வைரமுத்துவும் தன் தமிழ் படையோடு துணை இருக்க; பல பல புதுமைகளை, தென் தமிழ்நாட்டு வட்டார சொற்களை எல்லாம் தன்னுடைய பாடல்களில் வைரமுத்துவை வைத்து கொண்டு வந்திருப்பார். இந்த கூட்டணி செய்த மேஜிக் நிச்சயம் வேறு எந்த கூட்டணியாலும் செய்ய முடியாதது. இவர்களால் 'கொலம்பஸை கோடம்பாக்கத்துக்கு அழைத்து வர முடியும், நம் ஊர் பாட்டியை டிஸ்னி லேண்டில் அரிசு மாவு கோலம் போட வைக்க முடியும்'.
ஹிந்தியில் நல்ல பாடலை தந்துவிட்டால் அதனை தமிழிலும் கொண்டு வர வேண்டும் என இசைப்புயலும், கவிப்பேரரசுவும், முனைப்போடு செயல்பட்டார்கள். அதன் பலனாகத்தான் ஹிந்தியில் இடம்பெற்ற, 'காதல் கடிதம் தீட்டவே' மட்டுமின்றி, 'எங்கே என் புன்னகை' பாடல் எல்லாம் தமிழ்ப்படுத்தப்பட்டன. அதேசமயம் தமிழில் அந்த பாடல் ஹிட்டடிக்கும் என்று தோன்றினால் மட்டுமே ரஹ்மான் இப்படி செய்கையை செய்வார். அவர் அப்படி செய்யும்போது அங்கே வைரமுத்துவும் மிஸ் ஆகமாட்டார்; வெற்றியும் மிஸ் ஆகாது.
இசை கடிதம் வேண்டும்: ஹிந்திக்காக உருவான ஏ.ஆர்.ரஹ்மானின் பல ட்யூன்கள் தமிழில் வந்து சக்கைப்போடு போட்டிருக்கின்றன. அதற்கு வைரமுத்துவும் பக்கபலமாக இருந்தார். ஆனால் அந்தக் கூட்டணி இப்போது சில விஷயங்களால் பிரிந்திருப்பது பலருக்கும் வருத்தம்தான். என்ன பிரச்னையாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கொண்டு இசையும், தமிழும் மீண்டும் சேர வேண்டும். 'இசையும், தமிழும் பிரிந்திருப்பது; வானும், நீலமும் பிரிந்திருப்பது போல'.. மீண்டும் இவர்கள் சேர்ந்து வானின் நீலத்தை பேனா மையாக ஊற்றி காலம் முழுவதும் இசை கடிதம் தீட்ட வேண்டும்..


Click it and Unblock the Notifications
