A.R.Rahman - தற்கொலை செய்துகொள்ள நினைத்த ஏ.ஆர்.ரஹ்மான்.. அம்மா சொன்ன அந்த வார்த்தை
சென்னை: இசைப்புயல் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகள், கோல்டன் குளோப் விருதுகள் என பல விருதுகளை குவித்திருக்கிறார். உலகம் முழுவதும் அறியப்படும் நபராக இருக்கும் அவர் தற்போது பிருத்விராஜ் நடிப்பில் உருவாக்கியிருக்கும் ஆடுஜீவிதம் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். அதேபோல் லால் சலாம் படத்துக்கும் இசையமைத்திருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்தியா முழுவதும் கோடிக்கணக்கானோர் ரசிகர்களாக இருக்கின்றனர். உலகம் முழுவதும் அறியப்படும் நபராகவும் இருக்கிறார் ரஹ்மான். அவரது இசையை கேட்டுவிட மாட்டோமா, அவரை நேரில் சந்தித்துவிடமாட்டோமா, அவருடன் ஓரிரு வார்த்தைகள் பேசிவிடமாட்டோமா என பலர் தவம் இருக்கின்றனர். அந்த அளவுக்கு தனது இசையாலும் தனது நடவடிக்கையாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஈகோ இல்லாத இசைப்புயல்: இசையமைத்த முதல் படத்திலேயே தேசிய விருது, அதேபோல் கோல்டன் குளோப் விருது, ஆஸ்கர் விருதுகள் என உலகத்தின் புகழுடைய உச்சிக்கு சென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால் அவரது நடவடிக்கையும், பேச்சும் மிக மிக இயல்பாகவே இருக்கும். அதேபோல் எந்த ஈகோவும் காட்டாமல் பழகும் அவர் தனது மனதில் பட்டதை யார் மனதையும் புண்படுத்தாமல் சொல்லும் வித்தை தெரிந்தவர்.
ஏ.ஆர்.ரஹ்மானின் சமீபத்திய படங்கள்: ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் சிம்பு நடித்த பத்து தல படம், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்கள், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு நடித்த மாமன்னன் படங்கள் அண்மையில் வெளியாகின. படத்தில் அவரது இசையமைப்பில் உருவான அத்தனை பாடல்களும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.
மாமன்னன் ரஹ்மான்: பொதுவாக ஏ.ஆர்.ரஹ்மான் மீது ஒரு அடையாளம் இருக்கிறது. ஷங்கர், மணிரத்னம் போன்ற பெரிய இயக்குநர்களின் படங்களுக்குத்தான் இசையமைப்பாளர் என்பதுதான் அது. ஆனால் மாமன்னன் படத்துக்கு இசையமைத்ததன் மூலம் தனக்குள் அப்படி எந்த பாகுபாடும் இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறார். படத்தை அவரது இசை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்த படங்கள்: ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நாளை அயலான் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஆடுஜீவிதம், லால் சலாம் ஆகிய படங்களும் வெளியாகவிருக்கின்றன. இடையில் தமிழில் கொஞ்சம் பிஸி இல்லாமல் இருந்த ரஹ்மான் தற்போது மீண்டும் பிஸியாகியிருக்கிறார். எனவே அவரது ரசிகர்கள் இசை விருந்தை அனுபவிக்க தயாராக இருக்கிறார்கள்.
தற்கொலை: இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தற்கொலை குறித்து பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதுகுறித்து அவர், "தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் எனக்கும் தோன்றியிருக்கிறது. அப்போது என்னுடைய அம்மா என்னிடம், நீ மற்றவர்களுக்காக வாழும்போது அந்த மாதிரியான தவறான எண்ணம் தோன்றாது என கூறினார். உண்மையில் நீங்கள் பிறருக்காக வாழும்போது சுயநலமாக இருக்கமாட்டீர்கள். ஒருவருக்காக இசையமைப்பதாககூட அது இருக்கலாம். அடுத்தவருக்கு உணவு வாங்கி கொடுப்பதாக இருக்கலாம். அல்லது ஒரு புன்னகையைகூட உதிர்க்கலாம். இந்த மாதிரியான விஷயங்கள்தான் வாழ்க்கையுடன் உங்களை பயணிக்க வைக்கும்" என கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











