ஏஆர் ரஹ்மான் மாதிரியெல்லாம் அமைதியாக பேச முடியாது.. காரணம் சொன்ன அக்கா ரெய்ஹானா!
சென்னை: 30 ஆண்டுகளை கடந்து திரைத்துறையில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்து வருபவர் ஏஆர் ரஹ்மான். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் இவர் பல படங்களை கொடுத்துள்ளார். ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்துள்ள ஏஆர் ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்றுள்ளார்.
இவரது அக்கா ஏஆர் ரெய்ஹானாவும் இசையமைப்பாளர்தான். இவர் பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் அம்மா என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் இவர் தற்போது புதிய ஆல்பம் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்தப் பாடல் குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்: இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் கடந்த 1992ம் ஆண்டிலிருந்து இசையமைப்பாளராக செயல்பட்டு வருகிறார். இவரது பல படங்கள் மிகப்பெரிய ஹிட்டடித்தன. முதல் படமான ரோஜா படத்திலேயே தேசிய விருதை அள்ளியவர் இவர். இவரது யூனிக்கான இசைக்கு மயங்காத ரசிகர்களே இல்லை என்று கூறலாம். அந்த வகையல் சமீபத்தில் இவரது இசையில் பல படங்கள் தமிழில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனுஷ் இயக்கத்தில் வெளியான ராயன் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் சிறப்பான வரவேற்பை பெற்று படத்தின் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தது.
இசையமைப்பாளர் ஏஆர் ரெய்ஹானா: ஏஆர் ரஹ்மானின் அக்கா மற்றும் ஜிவி பிரகாஷின் அம்மா ஏஆர் ரெய்ஹானாவும் இசையமைப்பாளராக சில படங்களில் பணியாற்றியுள்ளார். சில ஆல்பம் பாடல்களையும் இவர் பாடியுள்ள நிலையில், தற்போது புதிதாக மாத்திக்கலாம் மாலை என்ற இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார் ஏஆர் ரெய்ஹானா. இந்தப் பாடலில் அவரே பாடியும் நடித்தும் உள்ளார். இந்த பாடல் இளம் தலைமுறையினரை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தற்போது பேசியுள்ளார். இந்த ஆல்பம் பாடல் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்த நிலையில், அதில் நடிகை சுஹாசினி, பாப் ஷாலினி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று பேசினர்.
மாற்றிய ஆர்ஜே பணி: இந்த நிகழ்ச்சியில் ரெய்ஹானா பங்கேற்று பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். இதனிடையே அவரிடம் சில கேள்விகளையும் பத்திரிகையாளர்கள் கேட்டனர். அவற்றிற்கு பொறுமையாகவும் நகைச்சுவையுடனும் புன்னகை மாறாமலும் பதிலளித்திருந்தார் ரெய்ஹானா. ஏஆர் ரஹ்மான் அமைதியாக பேசும் சுபாவம் கொண்டவர். இந்நிலையில் ரெய்ஹானா படபடவென பேசுவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ரெய்ஹானா, தான் துவக்கத்தில் மார்க்கெட்டிங் துறையில் இருந்ததாகவும் தொடர்ந்து ஆர்ஜேவாக பணியாற்றியதாகவும் இதனால் தன்னுடைய பேச்சு இப்படி மாறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இசை ஆல்பம் வெளியீடு: இந்தப் பாடலை கவிஞர் ருத்ரா எழுதியுள்ளதாகவும் தாங்கள் தோசை சுடும் நேரத்தில் அவர் முழு பாடலையும் எழுதி விடுவார் என்றும் ரெய்ஹானா தெரிவித்துள்ளார். தொடர்ந்து பல தளங்களிலும் தன்னை இணைத்து வரும் இவர், முன்னதாக பேட்டியொன்றில் தங்கள் குடும்பம் ஏன் இஸ்லாம் மதத்திற்கு மாறியது என்பது குறித்தும் பேசியிருந்தார். தான் இஸ்லாம் மதத்திற்கு மாறிய நிலையிலும் அதில் சரியாக இணைய தனக்கு 10 ஆண்டுகள் ஆனதையும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.


Click it and Unblock the Notifications











