வெளியாகி ஒரு வருடம் நிறைவு.. படம் அப்டி இப்டிதான் ஆனால் ட்ரெண்டிங்கில் அரபிக்குத்து
சென்னை: பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்திருக்கும் சூழலில் #ArabicKuthu ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்கள் மூலம் பெரும் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். முதல் இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டாகின. குறிப்பாக சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்கிய டாக்டர் படம் 100 கோடி ரூபாயை வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

விஜய்யுடன் கமிட்டான நெல்சன் திலீப்குமார்
இந்த வெற்றி கோலிவுட்டில் அனைவரையும் நெல்சன் திலீப்குமார் பக்கம் திருப்பியது. அதன் பலனாக முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய்யை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. ஃப்ரெஷ்ஷான இயக்குநர், டார்க் காமெடியில் அதகளம் செய்பவர் என்பதால் இந்தப் படத்தின் மீது விஜய் ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்பில் இருந்தனர். அதற்கேற்றபடி படத்துக்கு பீஸ்ட் என்றும் பெயரிடப்பட்டது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் ரோஸ்ட்டான பீஸ்ட்
ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு கடந்த வருடம் வெளியானது பீஸ்ட் திரைப்படம். ஆனால் விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை துளிகூட பீஸ்ட் படம் நிறைவேற்றவில்லை. இதனையடுத்து பலரும் நெல்சனை கடுமையாக விமர்சித்தனர். எந்தப் படம் ஹிட்டானாலும் நெல்சன் திலீப்குமாரை ட்ரோல் செய்வது சில மாதங்களுக்கு நடைமுறையில் இருந்தது. அதுமட்டுமின்றி, நெல்சன் திலீப்குமார் கதை என்பதையே யோசிக்கவில்லை; விஜய் இருந்தால் போதும் என நினைத்துவிட்டார் போல எனவும் பேசினர்.

மாஸ் ஹிட்டான அரபிக்குத்து பாடல்
படம் படுதோல்வியடைந்தாலும் விஜய் நடிக்கும் படத்தின் பாடல்கள் எப்படி ஹிட்டாகுமோ அதேபோல் பீஸ்ட் படத்தின் பாடல்களும் ஹிட்டாகின. அனிருத் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்களிலேயே அரபிக்குத்து பாடல் சென்சேஷனல் ஹிட்டானது. இந்தப் பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார்.

அரபிக்குத்து பாடல் உருவான கதை
நெல்சன் திலீப்குமாரும், அனிருத்தும் பாடல்கள் உருவாக்குவதை வீடியோவாக வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அப்படி அரபிக்குத்து பாடலுக்கும் மேக்கிங் வீடியோவை வெளியிட்டார்கள். அந்த வீடியோவி அனிருத், நெல்சன் திலீப்குமார், சிவகார்த்திகேயன் மூன்று பேரும் இருப்பர். மேலும், அனிருத்தின் ஸ்டூடியோவிலிருந்து விஜய்க்கு ஃபோன் செய்து பேசும்படி அமைந்திருந்த அந்த வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

அரபிக்குத்து பாடல் லிரிக் வீடியோ வெளியாகி ஒரு ஆண்டு நிறைவு
இந்நிலையில் அரபிக்குத்து பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனையடுத்து அரபிக்குத்து தொடர்பான ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது. இதனைக்கண்ட விஜய் ரசிகர்கள் பீஸ்ட் படம் அப்படி இப்படித்தான் இருக்கும். ஆனால் பாடலைப் பொறுத்துவரை எந்த குறையும் சொல்ல முடியாது. பாடல்கள் விஷயத்தில் எப்போதும் விஜய்தான் கிங் என்பதை இந்த ட்ரெண்டிங்கான ஹேஷ்டேக் நிரூபித்திருப்பதாக மகிழ்ச்சியுடன் பேசிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications