என்னது இவ்ளோ படங்களை கையில வச்சிருக்காரா.. ரிலீசுக்கு தயாராகும் அரவிந்த் சாமியின் படங்கள்!
சென்னை : ரோஜா என்ற படத்தில் அறிமுகமான அரவிந்த் சாமி அந்தப் படத்தின் மூலம் ஏராளமான ரசிகைகளை பெற்றவர்.
தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.
தற்போது தனி ஒருவன் படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த இவர் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

ரோஜா நாயகன்
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது என நடிகை மதுபாலாவுடன் சூப்பரான டூயட்டை தனது முதல் படமான ரோஜாவில் பாடி ரசிகர்களை கவர்ந்தவர் அரவிந்த் சாமி. இந்தப் பாடலில் மதுபாலாவைக் காட்டிலும் அரவிந்த் சாமிக்கு அதிகமான க்ரேஸ் காணப்பட்டது. ஏராளமான ரசிகைகளையும் இவருக்குப் பெற்றுத்தந்தது.

சிறப்பான கேரக்டர்
நாட்டுப்புறம் என்ற மதுபாலாவை கொஞ்சுவதிலாகட்டும், தேசியக் கொடியை காப்பாற்றுவதற்காக போராடுவதிலாகட்டும் இந்தப் படத்தில் சிறப்பான கேரக்டரை சிறப்பாக செய்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி முழுநேரமாக பிசினசில் ஈடுபட்டார்.

கோலிவுட்டில் ரீ-என்ட்ரி
இவரை மீண்டும் கோலிவுட்டில் நடிக்க வைத்த பெருமையை ஜெயம் ராஜா எடுத்துக் கொண்டார். அவரது தனி ஒருவன் படத்தில்தான் சித்தார்த் அபிமன்யு என்ற ஹீரோவிற்கு இணையான கேரக்டரில் நடித்து மிரட்டினார் அரவிந்த் சாமி. இந்தப் படத்தை தொடர்ந்து ஹீரோ, வில்லன் என்று மாறி மாறி நடித்த இவரை தொடர்ந்து படங்களில் பார்க்க முடியவில்லை.

அடுத்தடுத்த 7 படங்கள்
இவர் மீண்டும் பீல்ட் அவுட் ஆகிவிட்டாரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் தற்போது இவரது கைவசம் 7 படங்கள் உள்ளதாம். பல காரணங்களால் தள்ளிப் போன இந்தப் படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்திருக்கின்றன. இயக்குநர் ராஜபாண்டி இயக்கத்தில் கள்ளபார்ட் என்ற படத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார்.

சதுரங்க வேட்டை 2 படம்
படத்தில் இவருக்கு ரெஜினா கசண்ட்ரா ஜோடியாகியுள்ளார். விரைவில் இந்தப் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக நிர்மல் குமார் இயக்கத்தில் சதுரங்க வேட்டை 2 படத்திலும் த்ரிஷாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படமும் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ளது. மனோபாலா தயாரித்துள்ள இந்தப் படமும் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்த படங்கள்
இதனிடையே செல்வா இயக்கத்தில் வணங்காமுடி, தமிழ், மலையாளத்தில் உருவாகிவரும் ரெண்டகம் போன்ற படங்களும் இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இதுதவிர தெலுங்கு, இந்தி படங்களும் இவரது கைவசம் உள்ளன. இந்தப் படங்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.

ரசிகர்கள் ஆர்வம்
மலையாள ரீமேக்கான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் இவரது இயல்பான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், அடுத்தடுத்து இவரது 7 படங்கள் ரிலீசாக உள்ளது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. விரைவில் இந்தப் படங்கள் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











