ரூ.3 கோடியை சுருட்டிக்கொண்டு ஓடிய கிராபிக்ஸ் டிசைனர் கைது.. அர்ஜுனின் மார்டின் வெளியாவதில் சிக்கல்!
சென்னை: ஆக்ஷன் கிங் அர்ஜுனின் கதை, திரைக்கதையில் உருவாகி வரும் படம் மார்டின். இப்படத்தில் கன்னட நடிகரும் அர்ஜுனின் மருமகனுமான துருவா சார்ஜா ஹீரோவாக நடித்துள்ளார். இத்திரைப்படம் அக்டோபர் 11ந் தேதி வெளியாக இருந்த நிலையில், இதில் கிராபிக்ஸ் பணிக்காக 3.20 கோடி ரூபாய் கொடுக்கப்பட்ட நிலையில் அவர், பணிகளை முடிக்காமல் ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாசவி எண்டர்பிரைசஸ் மற்றும் உதய்மேத்தா புரொடக்ஷன் நிறுவனங்களின் சார்பில், உதய் மேத்தா மற்றும் சூரஜ் உதய் மேத்தா ஆகியோர் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் மார்ட்டின். பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில், கன்னட திரையுலகில் துருவா சர்ஜா நாயகனாக நடித்துள்ளார். மாளவிகா, சாது கோகிலா, அச்யுத் குமார் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அர்ஜுனின் மார்டின்: ஏ.பி.அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின், கதை, திரைக்கதையை ஆக்ஷன் கிங் அர்ஜுன் சர்ஜா எழுதியுள்ளார். ஒளிப்பதிவாளர் சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு செய்கிறார். மணி ஷர்மா இசையமைத்துள்ளார், மேலும் கேஜிஎஃப் மற்றும் சலார் புகழ் ரவி பஸ்ரூர் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் அக்டோபர் 11ம் தேதி தசரா பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
தயாரிப்பாளர் புகார்: இப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் உதய் மேத்தா கூறுகையில், மார்ட்டின் ஒரு திரைப்படம் மட்டுமல்ல. இது எங்களின் கனவுப் படைப்பு. கன்னடத்திலிருந்து பான் இந்திய அளவில் மிகப்பெரிய ஆக்ஷனை வழங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளோம். அந்த இலக்கை அடைவதற்கான நேரம் நெருங்கிவிட்டது என்று படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசி இருந்தார்.
ரூ..3 கோடி மோசடி: இந்நிலையில், தயாரிப்பாளர் உதய் மேத்தா, கிராபிக்ஸ் பணிக்காக பெங்களூரு மகாதேவ் பூரில் நிறுவனம் நடத்திய சத்யா ரெட்டி என்பரிடம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரூ.3.20 கோடி கொடுக்கப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், அவர், கிராபிக்ஸ் பணிகளை முடிக்காமல் ஏமாற்றி விட்டதாக பெங்களூரு பசவேஷ்வர் நகர் போலீஸ் ஸ்டேஷனில் தயாரிப்பாளர் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து, போலீசார் கிராபிக்ஸ் டிசைனரை தேடிய போது அவர், தலைமறைவானார்.
இதையடுத்து, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்த சத்யா ரெட்டியை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாகக் கூறப்படுகிறது. இதனால் துருவ் சார்ஜாவின் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











