45 கோடி முதலீடு.. வெறும் 66 ஆயிரம் மட்டுமே வசூல்.. மொத்தமும் நஷ்டம்.. நெப்போடிசம்தான் காரணமா?
சென்னை: இந்திய திரை உலகம் மிகவும் பெரியது. இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் இருப்பதைப்போல், மொழிவாரி சினிமா உலகங்களும் உள்ளது. குறிப்பாக, ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிவாரி சினிமா உலகங்களும் உள்ளது. ஆனால் பொதுவாக இங்கு, பாலிவுட் சினிமா உலகத்தினை வட இந்திய சினிமா உலகம் என்றும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றை தென்னிந்திய சினிமா உலகம் என்றும் அழைத்து வருகின்றனர். குறிப்பாக பாலிவுட் சினிமாக்களின் வணிகம் என்பது தென்னிந்திய சினிமாக்களின் தனிப்பட்ட சினிமா உலகங்களோடு ஒப்பிடுகையில் அதிகம். அதற்கு காரணம் வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஹிந்திப் படங்கள் ரிலீஸ் ஆவதுதான். இந்திப் படங்கள் ரிலீஸ் ஆவதால், உள்ளூர் படங்களின் வசூல் குறைந்துவிடுவதாகவும் அவற்றிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாமல் போகின்றது என்றும் ஒரு பேச்சு உள்ளது.
இப்படியான நிலையில் இந்தி சினிமா உலகில் ஒரு படம் பாக்ஸ் ஆஃபீஸில் வாழ்நாள் வசூலாக அதாவது, படம் திரையிடப்பட்ட நாட்கள் வரை வெறும் 66 ஆயிரம் மட்டுமே வசூல் செய்துள்ளது என்றால் உங்களால் அதிர்ச்சி அடையாமலோ ஆச்சரியப்படமாலோ இருக்க முடிகின்றதா? மேலும், படத்தின் மொத்த பட்ஜெட்டினைக் கேட்டால், தலையே சுற்றிவிடும். படத்தின் மொத்த பட்ஜெட் ரூபாய் 45 கோடிகள், அதேபோல் படத்தின் மொத்த வசூல் ரூபாய் 66 ஆயிரங்கள். இப்படி 99.99 சதவீதம் படுதோல்வியைச் சந்தித்த படம் எது? அந்தப் படத்தில் நடித்தது யார் யார்? படத்தின் படு தோல்விக்கு யார் காரணம்? அல்லது எது காரணம் என்பது குறித்து இந்தத் தொகுப்பில் காணலம்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான படம் தி லேடி கில்லர். இந்தப் படத்தில் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் கதாநாயகனாக நடித்தார். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பூமி பென்டேகர். இந்தப் படத்தினை இந்தி திரை உலகின் மிகவும் புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனமான டி- சீரீஸ் நிறுவனம் தயாரித்தது. மேலும் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்றது.

பட்ஜெட்: நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் படத்தை டிசம்பரில் வெளியிட ஒப்பந்தம் போட்டிருந்தது. அப்படியானால் படத்தினை நவம்பரிலாவது ரிலீஸ் செய்திருக்கவேண்டும். இல்லை என்றால், படத்தின் ஓடிடி ஒப்பந்தத்தை அந்நிறுவனம் ரத்து செய்து கொள்ளலாம். படம் பலகட்ட ரீ-ஷூட்கள் மூலம் திட்டமிட்டதைவிடவும் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டது. இதுமட்டும் இல்லாமல், ரிலீஸ் தேதி நெருங்கி வந்ததால் படத்தினை முழுமையாகவும் எடுக்கவில்லை. அதற்கே ரூபாய் 45 கோடிகள் செலவாகிவிட்டது. இது ஏற்கனவே திட்டமிட்ட பட்ஜெட்டினைவிட அதிகமான தொகை என கூறப்படுகின்றது.

வசூல்: இதனை படத்தின் இயக்குநர் அஜய் பாஹ்ல் பேட்டி ஒன்றில் கூறும்போது தெரிவித்திருந்தார். மேலும் படம் ரிலீஸ் ஆன நாளில் இந்தியா முழுவதும் வெறும் 293 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையானது. படக்குழு தரப்பில் இருந்தும் படத்திற்கு போதிய அளவிலான புரோமோசன்கள் எதுவும் செய்யப்படவில்லை. படத்தின் ட்ரைலரை மட்டும் வெளியிட்டுவிட்டு ரிலீஸ் செய்தது. இன்னும் சொல்லப்போனால் ஒரு புரோமோசன் நிகழ்ச்சிகூட நடத்தவில்லை. இப்படி ஒரு படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை. படம் மொத்தமாக ரூபாய் 66 ஆயிரம் மட்டுமே வசூல் செய்தது.

யூடியூப்: படம் பாக்ஸ் ஆஃபீஸில் படுதோல்வியைச் சந்தித்தாலும் படத்தினை முழுமையாக முடிக்காததாலும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது. இதன் காரணமாக மற்ற ஓடிடி நிறுவனங்களை படக்குழு அணுகியது. ஆனால் அவர்களும் ' வந்த வழிய விட்டுட்டு வராத வழியில போங்க' என்பதுபோல் விரட்டியடித்துள்ளனர். இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல், இந்தப் படத்தினை படக்குழு யூடியூப் தளத்தில் கடந்த மாதம் ரிலீஸ் செய்துள்ளது. அதனை இதுவரை 2.6 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். படம் பார்த்த பலரும் படம் குறித்து தங்களது விமர்சனங்களை கமெண்ட் செக்ஷனில் தட்டி விட்டு வருகின்றனர். மேலும் ஒருசிலர் படத்தின் தோல்விக்கு நெபோடிசமும் ஒரு காரணம் எனக் கூறிவருகின்றனர்.



Click it and Unblock the Notifications











