பாக்யராஜ், கமல் பாதையில் அர்ஜூன்... மகளுக்காக ‘காதலின் பொன் வீதியில்’ உருவாக்குகிறார்!
சென்னை: நடிகர் அர்ஜூன் தன் மகள் ஐஸ்வர்யாவை நாயகியாக நடிக்க வைத்து, காதலின் பொன் வீதியில் என்ற புதிய படத்தை தயாரித்து, இயக்குகிறார்.
திரையுலக பிரபலங்கள் தங்கள் வாரிசுகளை சினிமாவில் அறிமுகப்படுத்துவது வழக்கமான ஒன்று தான். ஆனால், அப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் அதிர்ஷ்டவசமாக சிலருக்கு தானாகவே அமைந்து விடும். வேறு சிலருக்கோ தங்கள் மகன், மகளை தாங்களே தூக்கிவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும்.
அந்தவகையில் தற்போது தன் மகளின் சினிமா எதிர்காலத்திற்காக புதிய படமொன்றை தயாரித்து, இயக்க திட்டமிட்டிருக்கிறார் நடிகர் அர்ஜூன்.

பட்டத்து யானை...
தேசபக்திப் படங்களுக்கு பேர் போனவர் நடிகர் அர்ஜூன். இவரது மகள் ஐஸ்வர்யா. இவர் விஷால் ஜோடியாக பட்டத்து யானை என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால் அப்படம் அவருக்கு எதிர்பார்த்த புதிய பட வாய்ப்புகளை உருவாக்கித் தரவில்லை. எனவே, தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்தார் ஐஸ்வர்யா.

காதலின் பொன் வீதி...
இந்நிலையில் மகளுக்கு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் முயற்சியில் இறங்கியுள்ளார் அர்ஜூன். இதற்கான காதலின் பொன் வீதியில் என்ற படத்தை அவர் இயக்குகிறார். தலைப்பிலேயே இது அக்மார்க் காதல் கதை என்பது புரிகிறது.

2 மொழிகளில்...
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு என அனைத்தையும் அர்ஜூனே கவனித்துக் கொள்கிறார். தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் உருவாகிறது.

அறிமுக நாயகன்...
இந்தப் படத்தில் ஐஸ்வர்யாவின் ஜோடியாக சந்தன் என்பவர் நாயகனாக அறிமுகமாகிறார். இவர்களுடன் இயக்குநர் கே.விஸ்வநாத், சுஹாசினி, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, சதீஷ், யோகி பாபு, ப்ளாக் பாண்டி, உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
முதல்கட்ட படப்பிடிப்பு...
இப்படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த 22ம் தேதி சென்னையில் துவங்கியது. சென்னையைத் தொடர்ந்து ஹைதராபாத், டெல்லி, மும்பை, தர்மசாலா உள்ளிட்ட பல பகுதிகளில் அடுத்தடுத்த படப்பிடிப்புகள் நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரிஜாதம்...
முன்னதாக மகன்களுக்காக எத்தனையோ தந்தைகள் படம் தயாரித்து இயக்கியுள்ளனர். ஆனால், அவர்களில் இருந்து வேறுபட்டு தன் மகளுக்கு பாரிஜாதம் படத்தை எடுத்தார் நடிகர் பாக்யராஜ். ஆனால், தொடர்ந்து படவாய்ப்புகள் அமையாததால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார் பாக்யராஜ் மகள்.

சபாஷ் நாயுடு...
இதேபோல், தற்போது கமல் இயக்கி, நடித்து வரும் சபாஷ் நாயுடு படத்தில் அவரது மகள் ஸ்ருதி நடித்து வருகிறார். இளைய மகள் அக்ஷரா உதவி இயக்குநராக பணி புரிந்து வருகிறார். அந்தவகையில், பல ஹிட் படங்களில் நடித்துள்ள நடிகர் அர்ஜூன், தன் மகளின் எதிர்காலத்திற்காக தானே புதிய படத்தைத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











