மகேஷ் பாபு படத்துல வில்லனாகறாரு நம்ம ஆக்ஷன் கிங் அர்ஜூன்... கலக்குங்க சார்
ஐதராபாத் : தெலுங்கில் மகேஷ் பாபு -கீர்த்தி சுரேஷ் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் சர்காரு வாரி பாட்டா.
இந்த படத்தில் கோலிவுட் ஸ்டார் அர்ஜூன் வில்லனாக நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரசுராம் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படம் அடுத்த ஆண்டு சங்கராந்தியில் திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் ரசிகர்கள்
ஆக்ஷன் கிங் அர்ஜூன் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இரும்புத்திரை படத்தில் இவரது கேரக்டர் பேசப்பட்டது. இந்த படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. இவருக்கு ரசிகர்களையும் பெற்றுத் தந்துள்ளது.

மலையாளத்தில் மரக்கார்
மேலும் இவர் தெலுங்கில் நா பேரு சூர்யா மற்றும் லைய் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மேலும் மோகன்லாலுடன் இணைந்து மலையாளத்தில் மரக்கார் படத்திலும் நடிக்கவுள்ளார். இதில் மஞ்சு வாரியர் மற்றும் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியும் இணைந்துள்ளனர்.

வில்லனாக இணையும் அர்ஜூன்
தற்போது ரவி தேஜாவின் கில்லாடி மற்றும் தமிழில் பிரெண்ட்ஷிப் ஆகிய படங்களில் அர்ஜூன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவுடன் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்துள்ள சர்காரு வாரி பாட்டா படத்தில் இவர் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சங்கராந்திக்கு ரிலீஸ்
மகேஷ் பாபுவிற்கு புதிய அவதாரத்தை கொடுத்த கீதா கோவிந்தம் படத்தை இயக்கிய பரசுராம் டைரக்ஷனில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











