ஏ யப்பா இவ்ளோ பாடி பில்டர்களா.. அர்னால்ட் ரசித்து நெகிழ்ந்த ஆணழகன் போட்டி!
நேற்று இரவு நடந்த ஐ இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அர்னால்டை வியக்க வைத்த, நெகிழ வைத்த நிகழ்ச்சி ஒன்று மேடையில் அரங்கேறியது.
அதுதான், இந்தியாவின் மிகச் சிறந்த ஆணழகன்கள் 11 பேர் மேடையில் தோன்றி இசைக்கேற்ப தங்கள் உடல்கட்டை அசைத்துக் காட்டிய நிகழ்ச்சி.

அர்னால்ட் ஒரு நடிகர், கலிபோர்னியாவின் முன்னாள் ஆளுநர் என்பதைத் தாண்டி, சிறந்த உடற்கட்டு கொண்ட ஆணழகன். உலக ஆணழகனாக மிஸ்டர் ஒலிம்பியா பட்டம் வென்றவர்.
அவர் மனதைக் கவரவே இந்த ஆணழகன்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் ஷங்கர். என்ன, கொஞ்சம் நீ...ட்டி முழக்கிவிட்டார்கள்.
இந்த நிகழ்ச்சியை வெகுவாகவே ரசித்தார் அர்னால்ட். மேடையிலிருந்த ஆணழகன்கள் அனைவரும் அப்படியே கீழிங்கு, அர்னால்ட், ரஜினி, ஷங்கர் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகில் வந்தனர். 11 பேரும் அர்னால்ட் முன்னாள் வணங்கி தங்கள் மரியாதையைச் செலுத்தினர்.

உடனே இருக்கையிலிருந்து எழுந்து வந்த அர்னால்ட் அவர்களின் தலையில் கைவைத்து வாழ்த்தினார். அவர்களுடன் படங்கள் எடுத்துக் கொண்டார். உடனே நம்ம ஊர் வழக்கப்படி அனைவரும் அவர் காலில் விழ ஆரம்பித்துவிட்டனர். அவருக்கு அது புரிய சில நொடிகள் பிடித்தது.. பின்னர் நெகிழ்ந்து போனார்!
பாடி பில்டர்கள் அனைவரும் உடலில் எண்ணெய் தடவிக் கொண்டிருந்தனர். மேடையில் ஆடியதில் ஏகமாய் வழிந்த வியர்வை வேறு. அப்படியே போய் அர்னால்டை கட்டிப்பிடிப்பதும், கையை இறுகப் பற்றுவதுமாக இருந்தார்கள். போட்டோ எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டினர். அர்னால்டும் இதற்காக முகம் சுளிக்காமல், அவர்களை தானே வரிசையில் நிற்க வைத்து அனைவருடனும் படம் எடுத்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சி குறித்து அர்னால்ட் கூறுகையில், "ஆணழகன்களின் நிகழ்ச்சியை பார்த்து மகிழ்ந்தேன். அவர்கள் தங்கள் உடற்கட்டை நன்றாக வைத்திருக்கிறார்கள். நானும் அவர்களை போல் ஆணழகனாக இருந்து கதாநாயகனா உயர்ந்தவன். இந்த நிகழ்ச்சி என்னை எனது இளமைக் காலத்துக்கே அழைத்துச் சென்றுவிட்டது," என்றார்.


Click it and Unblock the Notifications











