பித்தானியை புடிச்சு ஜெயில்ல போடுங்க.. வலுக்கும் எதிர்ப்பு.. டிரெண்டாகும் #ArrestPithani
மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு தொடர்பாக நடிகரும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அறை நண்பருமான பித்தானியிடம் சிபிஐ விசாரணை தீவிரப்படுத்தி வருகிறது.
Recommended Video
இரண்டாவது முறையாக சித்தார்த் பித்தானியுடமும், மூன்றாவது முறையாக சமையல்காரர் நீரஜ் இடம் விசாரணையை சிபிஐ தொடங்கி இருக்கிறது.
ட்விட்டரில் சுஷாந்த் சிங் ரசிகர்கள் #ArrestPithani என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தொடரும் மர்மம்
கடந்த ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் சுஷாந்த் சிங் இறந்து கிடந்தார். அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை போலீசார் தெரிவித்தனர். ஆனால், அவரது மரணத்தில் மர்மம் நீடிப்பதாக தொடர்ந்து எழுந்த கோரிக்கைகளின் அடிப்படையில் தற்போது சிபிஐ விசாரணையை துரிதப்படுத்தி வருகிறது.

சுஷாந்த் இல்லத்தில்
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தங்கியிருந்த இல்லத்திற்கு விரைந்த சிபிஐ அதிகாரிகள், அங்கே சுஷாந்த் சிங்கின் மரணம் தொடர்பாகவும், முதலில் பார்த்த சாட்சியங்களை வைத்து, என்ன நடந்தது, எப்படியெல்லாம் நடந்தது என்ற டெமோ ஒன்றை நிகழ்த்தி பார்த்துள்ளனர். சுஷாந்தின் அறை நண்பர் சித்தார்த் பிதானி, சமையல்காரர் நீரஜ் மற்றும் திபேஷ் என்ற மூவரிடம் விசாரணை நடத்தினர்.

முன்னுக்கு பின் முரணாக
சித்தார்த் பித்தானி உள்ளிட்ட மூவரிடம் முதற் கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அவர் அளிப்பதாக சந்தேகப்படும் சிபிஐ அதிகாரிகள், அவர்களை மீண்டும் மீண்டும் அழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டாவது முறையாக
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அறை நண்பர், க்ரியேட்டிவ் மேனேஜர், நடிகர் என சொல்லப்படும் சித்தார்த் பித்தானியிடம் இரண்டாவது முறையாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சுஷாந்த் மரணத்திற்கு அவர் தான் காரணம் என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என #ArrestPithani என்ற ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

உடைக்கப்பட்ட கதவு
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இறந்த உடல், அவரை காவலர்கள் மேற்பார்வையில் ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்லப்பட்ட வீடியோ என பல வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன. அதில், சுஷாந்த் சிங் அறை கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக நெட்டிசன்கள் தனி விசாரணை நடத்தி புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











