twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கலை இயக்குநர் ஜேகே என்னும் என் இனிய நண்பர்

    By Ka Magideswaran
    |

    திரைத்துறையில் வெற்றிகரமாக வலம் வந்த பலரும் என் நட்பு வட்டத்தில் இருக்கிறார்கள் நான் திரைப்படங்கள் பார்த்து வளர்ந்த இளமைக் காலத்தில் திரைக்கலைஞர்களாக வலம்வந்த பெருமக்கள்கூட என்னிடம் அன்பு பாராட்டத் தவறவில்லை. அவர்களில் பற்பலர் என்னோடு நட்பினராகத் தொடர்கின்றனர். கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாதபோதும் மனம் ஒன்றிய நட்பில் இணைந்து இருந்தவர்கள். அத்தகைய நட்பினைக் கணக்கில் கொண்டால் எண்ணமுடியாத நண்பர்களைப் பெற்றவனாவேன்.

    நலம் வினவல், எழுத்தினைப் பின்தொடர்தல், நேரில் காண அவாவுதல், நேர்கண்டால் நேரம் போவது தெரியாமல் அன்புச் சொற்களில் அளவளாவுதல் என்னும் நிலையில் பழகும் நண்பர்கள் கைவிரல் எண்ணிக்கைக்குள் அடங்குவர். அத்தகையோரில் என்னை நட்பால் நண்ணி நயந்து அன்பு பாராட்டியவர் 'கலை இயக்குநர்’ ஜேகே என்றழைக்கப்படும் ஜெயக்குமார்.

    art director jk-my friend

    ஒரு கலைஞரை நாம் கண்டு வியந்த அதே பொழுதில் அவரும் நம் பங்களிப்புகளைத் தொடர்ந்து கண்ணுற்று வந்திருக்கிறார் என்பது தெரியவரும்பொழுது நேர்காணாவிட்டாலும் நெஞ்சம் கண்டுவிட்ட நண்பர்கள் ஆகின்றோம். ஜேகேக்கும் எனக்குமான நட்பு அத்தகையதே. எங்கள் இருவர்க்குமிடையில் இருபத்தைந்து ஆண்டுகள் அகவை இடைவெளி இருப்பினும் எண்ணங்களின் அலைவரிசைகளில் எவ்வித இடைவெளியும் இல்லை. முப்பதாண்டுகளுக்கும் மேலாகவே திரைத்துறையில் தொடர்ந்து பங்களித்துவிட்டு ஓய்வான பொழுதில் அவர் என்னை அழைத்தார். அந்த அழைப்பிலேயே தாம் படித்தவற்றை நினைவிலிருந்து அருவிபோல் கொட்டிக்கொண்டே போனார். நம் பெயரைக்கூட யாரும் நினைவில்கொள்ளாத விரைவுலகில் அன்றைய வரிகளையும் கவிதைகளையும் ஒருவர் அணிநயந்து சொல்வதைக் கேட்டு நெகிழ்ச்சியாகிவிட்டது. உண்மையில் எனக்கேகூட என் கவிதைகள் பல நினைவில் நிற்பதில்லை. அவற்றை இன்னொருவர் கூறக் கேட்டால் எத்தகைய உளக்கிறக்கம் ஏற்படும் என்று எண்ணிப் பாருங்கள். “சார்… உங்களைக் கலை இயக்குநராகக் கண்டு வியந்திருக்கிறேன். மகாநதி திரைப்படத்திற்குத் தாங்கள் வடிவமைத்த சிறைச்சாலை அரங்கினைக் கண்டு ஊரே வியந்தது. அப்போது நான் முகிழ்க்கத் தொடங்கியிருந்த காலம். அத்தகைய தாங்கள் என்னைப் பாராட்டுவது அரிதினும் அரிதாக இருக்கிறது. என்னால் நம்ப முடியவில்லை…” என்று கூறினேன். ஒருபோதும் தம்மை சார் என்று அழைக்கலாகாது, “ஜேகே” என்று பெயர்சொல்லியே அழைக்க வேண்டும் என்பது அவருடைய அன்புக் கட்டளை. ஆனாலும், இன்றுவரையிலும் அவரைப் பெயர்சொல்லி அழைப்பதற்கு எனக்கு வாய்வரவில்லை. என்னிடம் அலைபேசியதற்கு அடுத்த நாளே அவரிடமிருந்து மிகப்பெரிய உறைப்பொட்டணம் வந்தது. அவர் வரைந்த நூற்றுக்கணக்கான ஓவியங்கள் அதில் இருந்தன.

    சென்னைப் பெரியமேட்டில் உள்ள அரசுக் கவின்கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்றவரான ஜேகே மேற்படிப்புக்காக இலண்டன் சென்றவர். மேலை நாட்டுக் கல்வி வாழ்க்கையைப் பற்றி என்னிடம் கூறியிருக்கிறார். “இலண்டன்ல இருந்து திரும்பி வரேன்… தமிழ்நாடே காதல் ஓவியம் பாடல்களால் நிரம்பியிருந்தது…” என்றார். மேற்படிப்பு வாழ்க்கையில் வாய்த்த கல்லூரித் தோழியுடன் அறைவாடகையைப் பகிர்ந்து வாழும்பொருட்டு, 'தேம்ஸ்’ நதிக்கரையின் கைவிடப்பட்ட படகு ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு வாழ்ந்த மகிழ்ச்சியான நாள்களைப் பற்றி அவர் எடுத்தியம்பும்போது அவருடைய கண்கள் நீர்த்தாலாட்டில் மிதப்பதுபோல் மயங்கும். அத்தோழியுடன் பிற்பாடு தொடர்பு ஏதும் இல்லாதபோதும் அவ்வப்போது நலவினாக்களோடு தொடரும் நிலை. ஒருநாள் அத்தோழி தொலைவிளித்து “நான் எங்கே இருக்கிறேன் தெரியுமா ?” என்று கேட்டிருக்கிறார். “எங்கே?’ என்றதற்குக் “கதவைத் திறந்து பார்” என்பது விடை. வெளியே தேம்ஸ் நதிக்கரைத் தென்றல் நின்றது. அந்நிகழ்வினை அன்னார் சொன்னபோது என் நெஞ்சாங்கூட்டின் அடுக்குகள் அனைத்தும் புரண்டன. “காதல் படிக்கட்டுகள்” நூலிலுள்ள அவருடைய கட்டுரை அந்தக் காதலைத்தான் கூறியிருக்கும் என்று நினைக்கிறேன்.

    வாழ்க்கை முழுவதையும் கலையாகக் காண்பதையே நோக்காகக் கொண்டிருப்பவர் ஜேகே. அவர் சொல்கின்ற எல்லாவற்றிலும் கவிதைத்தன்மை இருக்கும். “வாங்க. உங்களைப் பேச வைத்துக் கேட்க வேண்டும்…” என்று அழைப்பார். அவரிடம் நாம் என்ன பேசுவது என்று தயங்க வேண்டியதில்லை. அவர் பேசும்படி எதையேனும் தொடக்கித் தந்துவிட்டால் போதும், அவர் பேசுவதை நாம் கேட்டுக்கொண்டிருக்கலாம். நினைவிலிருந்து எண்ணற்ற நிகழ்ச்சிகளைக் கூறிக்கொண்டே செல்வார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் குடும்பத்தோழமைகளுள் ஒருவர் கலை இயக்குநர் ஜேகே. இருவர் பெயருமே ஜேகே என்பதும்கூட நல்ல பொருத்தம்தான். ஜெயகாந்தனோடு உரையாடாத குறையை அவரே தீர்த்து வைத்தார்.

    ஜேகேவின் தந்தையார் புகழ்பெற்ற திரைப்பட நிறுவனமான விஜயா வாகினியோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர். நாகிரெட்டியாரோடு நெருங்கிப் பழகியவர். அந்நிறுவனத்திற்குத் தேவையான பொருள்களைத் தருவிக்கும் பொறுப்பு ஜேகேயின் தந்தைக்கு வழங்கப்பட்டிருந்தது. அதனால் இளமை முதலே திரைத்துறையினரோடு நெருங்கிப் பழகக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. மகனின் விருப்பத்திற்கு மறுப்பேதும் கூறாத தந்தையார் அவர் விரும்பிய கலைப்படிப்பினைப் படிக்க வைத்தார்.

    நேதாஜி என்னும் இயக்குநர் வழியாகவே திரைத்துறைக்குள் நுழைந்தவர் ஜேகே. விஜயகாந்தின் திரைப்படங்களுக்குக் கலை இயக்குநராகத் தொடர்ச்சியாய்ப் பணியாற்றினார். உழவன் மகனில் தொடங்கிய அவருடைய கலைப்பயணம் விஜயகாந்தின் மகன் நடித்த திரைப்படம் வரையிலும் தொடர்ந்தது. சகாப்தம் படப்பிடிப்பு நடந்தபோது “வாங்களேன்… ஒரு செட்டு போட்டிருக்கேன்… அப்படியே பார்த்துட்டு வரலாம்…” என்று அழைத்தார். தேநீர் குடிக்க அழைப்பதுபோல் இருக்கும் அது. அப்படி என்னை அழைத்துச் சென்று, தம்பி தங்கைகளை ஆடவைத்துக்கொண்டிருந்த நடன இயக்குநர் இராஜுசுந்தரத்தின் இருக்கைக்குப் பின்னால் அமரவைத்துவிட்டார். படத்துக்கு வேண்டிய பெரும்புள்ளி போலும் என்பதைப்போல் பார்த்த நடன இயக்குநர் எதற்கும் இருக்கட்டுமென்று என்னைப் பார்த்துப் புன்னகைத்து வைத்தார்.

    தம் திரைப்படங்களில் இன்னார் பணியாற்றினால்தான் சரியாக வரும் என்பதில் விஜயகாந்த் தெளிவாக இருப்பாராம். “இசைக்கு இளையராஜா என்றால்தான் சிறப்பாக இருக்கும். கலைக்கு ஜேகேதான்” என்பது அவருடைய வலியுறுத்தல். அவ்வாறே கமல்ஹாசனுடன் மகாநதியில் தொடங்கிய பயணம் மன்மதன் அம்புவரைக்கும் தொடர்ந்தது. நந்தனம் புத்தகக் கண்காட்சி அரங்கத்திற்கு வந்த ஜேகே “இங்கதான் மன்மதன் அம்பு மாடு முட்டற காட்சி எடுத்தோம்…” என்றார். சென்னை வந்தால் செய்தி சொல்லாமல் சென்று விடாதீர்கள் என்பது அவருடைய வேண்டுகோள். பன்முறை அவரோடு சென்னைத் தெருக்களில் மகிழுந்தில் அலைந்திருக்கிறேன். பெசண்ட் நகர் கடற்கரையில் புத்தர் சிலையருகே நான் எழுதுவதுபோல் ஒரு படத்தினை அவர் எடுத்துத் தந்தார். “ஒரு நிலைப்படம் நன்றாக வரவேண்டுமானால் நிழல் நீளும் திசையிலுள்ள படங்களைத்தான் படம்பிடிக்க வேண்டும்…” என்பது அவர் எனக்குக் கற்றுக்கொடுத்தது.

    அவர் ஆயிரக்கணக்கான ஓவியங்களை வரைந்து வைத்திருக்கிறார். சில திங்கள்களுக்கு முன்பு எழும்பூர் இலலிதகலா அகாதமியில் அவர் வரைந்த ஓவியங்கள் அனைத்தையும் காட்சிப்படுத்தினார். அவ்வோவியங்களால் அந்தப் பெரும் கட்டடம் கலைப்பெருங்கோவிலாக மாறி நின்றது. ஜேகேவின் ஓவியங்களை விளங்கிக் கொள்வதற்கு வேறு வகையான பார்வை வேண்டும். அவர் விளக்கத்தால்தான் அவற்றின் கலைக்கட்டமைப்பு விளங்கும். என் கவிதை வரிகளால் பெற்ற காட்சிப் படிமத்தைக் கூட ஓர் ஓவியத்தில் பயன்படுத்தியிருப்பதாக அவருடைய ஓவியத் தொகுதி நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

    அவரோடு சென்னைக்குள் மகிழுந்தில் சென்றபோது பழைமையான பெருங்கட்டடம் ஒன்றின்முன் நிறுத்தினார். “என்னங்க… எதோ டவுன்ஹால் மாதிரி இருக்கே… இங்கே நிறுத்திட்டீங்க…” என்றேன். “இதுதான்ங்க மாமனார் வீடு…” என்றார். எனக்கு வாயடைத்துப் போய்விட்டது. ஜேகேவின் குடும்பத்தினர் சிற்றரசர்களாக இருந்தவர்கள். அரசரைப்போல் அனைத்தையும் பெறக்கூடிய நிலையில் இருந்தும் கலைவாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தவர் ஜேகே.


    - கவிஞர் மகுடேசுவரன்

    English summary
    Cinema Article about art director JK my friend
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X