அருள்நிதியின் அப்பா, அம்மாவுக்கு பீமரத சாந்தி விழா.. பெற்றோருக்கு முகத்தில் மகிழ்ச்சியை பாருங்க
சென்னை: நடிகர் அருள்நிதி கோலிவுட்டில் குறிப்பிடத்தகுந்த நடிகர்களில் ஒருவர். அவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதையும் வித்தியாசமாக இருக்கும் என்பதால்; அவரது படங்களுக்கென்று மார்க்கெட்டில் எப்போதும் ஒரு டிமாண்ட் இருப்பது வழக்கம். அடுத்ததாக அருள்வான், மை டியர் சிஸ்டர் திரைப்படங்கள் வரவிருக்கும் சூழலில்; தனது பெற்றோருக்கு பீமரத சாந்தி விழாவை நடத்தியிருக்கிறார்.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய குடும்பத்திலிருந்து திரைத்துறைக்கு வந்தவர் அருள்நிதி. பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான வம்சம் திரைப்பாத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. மேலும், அருள்நிதியின் நடிப்புக்கும் நல்லதொரு அப்ளாஸ் கிடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். அப்படத்துக்கு பிறகு மௌன குரு, தகராறு உள்ளிட்ட படங்களில் நடித்தார். அப்படங்கள் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டாலும்; வசூலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

டிமான்ட்டி காலனி: அந்தச் சூழலில்தான் டிமான்ட்டி காலனி திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அப்படம் பெற்ற வணிக ரீதியிலான வெற்றி அருள்நிதியின் கிராஃபை உயரத்துக்கு கொண்டு சென்றது. அதுமட்டுமின்றி டிமான்ட்டி காலனியின் வெற்றி அருள்நிதிக்கும் கூடுதல் உற்சாகத்தை கொடுக்க; முன்னைவிட வேகமாகவும், தெளிவாகவும் உழைக்க தொடங்கினார். அதன் காரணமாக, ஆறாது சினம், பிருந்தாவனம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே - 13 உள்ளிட்ட வித்தியாசமான படங்களில் நடித்தார்.
டிமான்ட்டி காலனி 2: ஆனால் அவை எதுவுமே வணிக ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அப்போதும் அவருக்கு கைகொடுத்தது டிமான்ட்டி காலனிதான். அதாவது அந்தப் படத்தின் இரண்டாவது பாகம் கடந்த 2024ஆம் ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்டது. அடுத்ததாக மூன்றாவது பாகமும் வரவிருக்கிறது. இதுதவிர்த்து அருள்வான், மை டியர் சிஸ்டர் திரைப்படங்களும் வரவிருக்கின்றன.
எதார்த்தமான மனிதர்: அருள்நிதியிடம் கதை தேர்ந்தெடுக்கும் விதம், நடிக்கும் திறமை என பல பாசிட்டிவ்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது அவரது எதார்த்தமான குணம். சமீபத்தில்கூட அருள்வான் படக்குழு செய்தியாளர்களை சந்தித்தபோது அருளை ஃபோட்டோ எடுத்துக்கொண்டே இருந்தார்கள். அவரோ, 'நீங்கள் என்னை எத்தனை ஃபோட்டோ எடுத்தாலும்; என்னிடம் இருப்பது ஒரே போஸ்தான்' என ஜாலியாக சொல்லிவிட்டு சென்றதும் பலரையும் ரசிக்க வைத்தது.
பீமரத சாந்தி விழா: இந்நிலையில் அவர் தனது தாய் மோகனா, தந்தை மு.க. தமிழரசு ஆகியோருக்கு நேற்று திருக்கடையூர் கோயிலில் பீமரத சாந்தி விழாவை நடத்திவைத்தார். இதில் அவர்களது உறவினர்களும், திமுக நிர்வாகிகளும் கலந்துகொண்டார்கள். தங்களது மகன் தங்களுக்கு இந்த விழாவை நடத்துவதை பார்த்து பெற்றோர் இரண்டு பேரும் ஆனந்தத்தில் திளைத்தார்கள். மேலும், தாய், தந்தைக்கு இப்படி ஒரு விழாவை எடுத்த அருளுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
