100 கோடி சம்பளம் கேட்கும் விஜய், அஜித்.. தமிழ் சினிமா தரம் குறைகிறது.. அருண்பாண்டியன் ஆதங்கம்!
சென்னை: புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 என அடுத்தடுத்து தெலுங்கு மற்றும் கன்னட படங்கள் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் ஆட்சி செய்யத் தொடங்கி உள்ளன.
அஜித் நடித்த வலிமை மற்றும் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படங்கள் அதற்கு போட்டியாக இல்லாமல் தோல்வியைத் தழுவிய நிலையில், தமிழ் சினிமாவில் கடும் எதிர்ப்பலை கிளம்பி உள்ளது.
இந்நிலையில், நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் விஜய் மற்றும் அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவதில் மட்டுமே குறியாக இருப்பது தான் இந்த வீழ்ச்சிக்கு காரணம் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

நம்பர் ஒன் டோலிவுட்
பாகுபலி படங்கள் மூலம் பாலிவுட்டையே பதற வைத்தார் இயக்குநர் ராஜமெளலி. அதே பணியை மீண்டும் மிஸ் பண்ணாமல் ஆர்ஆர்ஆர் படம் மூலம் செய்து டோலிவுட்டை இந்தியாவிலேயே நம்பர் ஒன் இடத்துக்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளார். அல்லு அர்ஜுனின் புஷ்பா படமும் 350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

கெத்துக் காட்டும் கன்னட சினிமா
தென்னிந்திய சினிமாவிலேயே கடைசி இடத்தில் இருந்த கன்னட சினிமாவை இயக்குநர் பிரசாந்த் நீல் மற்றும் நடிகர் யஷ் இருவரும் இணைந்து கேஜிஎஃப் முதல் மற்றும் கேஜிஎஃப் 2ம் பாக படங்களை கொடுத்து உலக சினிமா மேப்பில் சாண்டில்வுட்டிற்கு உயர்ந்த இடத்தை கொடுத்துள்ளனர். ராஜமெளலியின் RRR படத்தை தொடர்ந்து மிகப்பெரிய வசூல் வேட்டையை கேஜிஎஃப் நடத்தி வருகிறது.

புரொடக்ஷன் வேல்யூ
பாகுபலி, ஆர்ஆர்ஆர், புஷ்பா, கேஜிஎஃப் படங்களில் நடித்த பிரபாஸ், ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்கள் யாரும் 100 கோடி சம்பளம் வாங்குவதில்லை. அதற்கு பதிலாக படத்தின் புரொடக்ஷன் வேல்யூவை அதிகரிக்கும் விதமாக பணத்தை படத்திற்காக செலவு செய்துள்ள நிலையில் தான் இப்படியொரு தரமான மேக்கிங் கொண்ட படங்கள் வெளியாகி உலகளவில் சினிமா மார்க்கெட்டை அதிகரித்து இருக்கிறது.

100 கோடி சம்பளம்
அண்ணாத்த, வலிமை, பீஸ்ட் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் 100 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கப் போகும் படத்திற்கு 105 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அத்தனை கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களின் படங்கள் ஏன் தரமாகவும் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு இல்லை? என்கிற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அருண்பாண்டியன் ஆதங்கம்
நடிகர் கருணாஸ் நடிப்பில் உருவாகி உள்ள ஆதார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன், மற்ற மொழி படங்கள் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவதால் தான் தமிழ் சினிமாவின் தரம் குறைந்து போயுள்ளதாக ஆதங்கப்பட்டு பேசியுள்ளார்.

அமீர் மறுப்பு
ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜிஎஃப் படங்களை வைத்து தமிழ் சினிமாவை எடை போடுவது சரியானதாக இருக்காது. தமிழ் சினிமா ஒரு நாளும் பின்னோக்கி செல்லாது. நல்ல கதையம்சம் கொண்ட உலகத் தரம் வாய்ந்த படங்கள் தமிழில் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன என அருண்பாண்டியனின் கருத்துக்கு அதே மேடையில் மறுப்பு தெரிவித்து இருந்தார்.


Click it and Unblock the Notifications











