இட்லி கடை படத்தின் கதை இதுதானா?.. திடீரென உள்ளே நுழைந்த பிரபலம்.. அஜித்தோட வில்லன் தான்!
சென்னை: நடிகர் அருண் விஜய்க்கு திருப்புமனையாக அமைந்த படம் என்றால் அது கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த என்னை அறிந்தால் படம் தான். அந்த படத்தில் விக்டர் கதாபாத்திரத்தில் மனுஷன் பிரித்து மேய்ந்திருப்பார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான வணங்கான் படத்தில் கூட சூர்யா நடிக்கத் தயங்கி வெளியேறிய நிலையில், நடிப்புக்காக எந்த உச்சத்தை வேண்டுமானாலும் தொடலாம் என நடித்திருப்பார்.
இந்நிலையில், அஜித்தின் குட் பேட் அக்லி படத்துக்குப் போட்டியாக இந்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி வெளியாகவுள்ள தனுஷின் இட்லி கடை படத்திலும் அருண் விஜய் இணைந்துள்ளார். அவர் இந்த படத்தில் இணைந்திருக்கும் அட்டகாசமான போஸ்டரை தற்போது நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

இதுவரை இட்லி கடை படத்தின் கதை எப்படி இருக்கும் என்கிற குழப்பத்துடன் இருந்த ரசிகர்களுக்கு தற்போது இந்த படத்தின் கதை இதுதானா? என்கிற யூகங்கள் கிளம்பும் அளவுக்கு இந்த போஸ்டர் அமைந்துள்ளது.
ஏப்ரல் 10 சண்டை உறுதி: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகிறது. பொங்கலுக்கே அந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விடாமுயற்சி படத்தின் தாமதம் காரணமாக அந்த படமும் தள்ளிப்போய் விட்டது. அஜித் படத்துக்கு போட்டியாக வரும் வாரம் தமிழில் எந்தவொரு படமும் வெளியாகாத நிலையில், குட் பேட் அக்லி படத்துக்கு போட்டியாக தனுஷ் தனது இட்லி கடை படத்தை இறக்குகிறார். இன்று வெளியான அறிவிப்பிலும் ரிலீஸ் தேதியை கொட்டை எழுத்துக்களில் போட்டு ஏப்ரல் 10 கிளாஷ் உறுதி என்பதை கூறியுள்ளார்.

இட்லி கடையில் இணைந்த அருண் விஜய்: நடிகர் அருண் விஜய் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனால், அவருக்கு சோலோ வெற்றி பெரிதாக கிடைப்பதில்லை. இந்நிலையில், தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இட்லி கடை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் இணைந்துள்ள அறிவிப்பை சற்றுமுன் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண் என காம்பினேஷனே அள்ளுது என்கின்றனர்.
ஓஹோ இதுதான் கதையா?: இட்லி கடை என்கிற டைட்டிலை பார்த்த ரசிகர்களுக்கு ராயன் படத்தில் வருவதை போல ஃபிரைட் ரைஸ் கடையை நடத்தும் தாதா போல இந்த படத்தில் இட்லி கடை நடத்திக் கொண்டே தனுஷ் சம்பவக்காரராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அருண் விஜய் பாக்ஸிங் கிளவுஸ் உடன் ரிங்கில் இருப்பதையும் அவருக்கு உதவியாளராக தனுஷ் இருப்பதையும் பார்த்த ரசிகர்கள் இட்லி கடை படம் பாக்ஸிங் கதையா என்கிற கேள்வியை எழுப்பி உள்ளனர்.
அருண் விஜய்க்கு பதில் தனுஷ்: எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, பத்ரி படங்களை போல அருண் விஜய்க்கு அடிபட்டு விட தனுஷ் பாக்ஸராக மாறி எதிரிகளை பந்தாடுவது தான் படத்தின் கதையாக இருக்குமோ என்றெல்லாம் யூகங்களை தட்டி விடுகின்றனர். தனுஷ் இயக்கத்தில் வெளியான ராயன் படத்திற்கே கடுமையான விமர்சனங்கள் குவிந்த நிலையில், இட்லி கடை படம் எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஏப்ரல் 10 வரை காத்திருக்கத்தான் வேண்டும்.


Click it and Unblock the Notifications











