CM விஜய்யின் முடிவில் தலையிடாதீங்க.. அவருக்கு என்ன செய்யணும்னு தெரியும்.. விஷாலுக்கு அருண் விஜய் பதிலடி
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை மே 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் அமைச்சர் ராஜ் மோகனுக்கு பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, தகவல் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை போன்ற இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கும்போது, ராஜ் மோகன் சினிமா துறை குறித்து அனுபவம் இல்லாதவர், அப்படி இருக்கையில் அவரை சினிமாதுறைக்கு அமைச்சராக நியமித்ததை திரும்பப் பெற்றுக் கொண்டு, நீங்களே சினிமாதுறைக்கும் அமைச்சராக இருக்க வேண்டும் என்று நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் கோரிக்கை வைத்தார், அதற்கு நடிகர் அருண் விஜய் பதிலடி கொடுக்கும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக நடிகர் விஷால் தனது எக்ஸ் பக்கத்தில், " நம்ம முதலமைச்சர் விஜய், தவெகவில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவையைப் பிரிச்சு கொடுத்ததைப் பார்க்க சந்தோஷமா இருக்கு. ஆனா, சினிமா தொழில்நுட்பம் மற்றும் சினிமாடோகிராப் சட்ட அமைச்சராக மாண்புமிகு ராஜ் மோகன் அவங்களை நியமிச்சிருக்கிறது கொஞ்சம் வருத்தமளிக்குது.
இப்போ சினிமா இண்டஸ்ட்ரி இருக்குற நிலைமையில, எக்கச்சக்கமான சீர்திருத்தங்கள் தேவைப்படுது; தயாரிப்பாளர்களும், தயாரிப்பு நிறுவனங்களும் ரத்தம் சிந்தி பிழைப்பு நடத்திட்டு இருக்காங்க. இந்தச் சூழல்ல, நம்ம சினிமா உலகத்தோட குறைகளையும், கோரிக்கைகளையும் ஒரு சங்கமாவோ இல்ல கூட்டமைப்பாவோ நாங்க எப்படி அவர் கிட்ட கொண்டு போய் சேர்க்க முடியும்? ஏன்னா, நம்ம CM விஜய் கடந்த 30 வருஷமா அடிமட்டத்துல இருந்து இந்த சினிமா இண்டஸ்ட்ரியோட ஒரு பகுதியா இருக்காங்க. இண்டஸ்ட்ரில என்ன நடக்குதுன்னு அவருக்குத் தெரிஞ்ச அளவுக்கு, சினிமா பத்தி பெருசா எந்த அனுபவமும் இல்லாத ஒரு புது அமைச்சருக்கு எப்படித் தெரியும்?

நல்லது நடக்கனும்: மேலும், அமைச்சர் ராஜ்மோகன் அவங்களை குறைச்சு மதிப்பிடல, அது என் நோக்கமல்ல, இது என்னோட தனிப்பட்ட கருத்து மட்டும்தான். நம்ம CM நினைச்சா மட்டும் தான் இந்த இண்டஸ்ட்ரிக்கு ஒரு நல்ல விடிவுகாலம் பிறக்கும். எல்லாம் நல்லபடியா நடக்கும்னு நம்புவோம்" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்தது.
அருண் விஜய் பதிலடி: இவரது பதிவுக்கு நடிகர் அருண் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதாவது அவரது பதிவில்," மக்களின் நம்பிக்கையை வென்று, தேர்தலில் வெற்றி பெற்று, உங்கள் விருப்பப்படி செயல்படுங்கள். தயவுசெய்து முடிவுகளில் தலையிடாதீர்கள்.. இந்தத் துறையைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்கு நமது பிரச்சனைகள் தெரியும் என்றும், அவர் நிச்சயமாக நமக்கு உதவுவார் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.. தயவுசெய்து அவரது முடிவுகளை மதித்து, ஒரு முடிவுக்காகக் காத்திருங்கள்.. நாம் எந்த முடிவிற்குள்ளும் தலையிட வேண்டாம். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நம்புவோம்" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இணையவாசிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் பலரும் அருண் விஜய்யின் இந்த பதிவு, விஷாலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications