அருண் விஜய் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கார்த்திக் நரேன் கனவு.. மாஃபியா ரிலீஸ் தேதி இதோ!
சென்னை: துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஃபியா படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரசன்னா நடிப்பில் உருவாகியுள்ள மாஃபியா படம் வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி ரிலீசாகிறது.
தற்போது இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான லைகா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முதல் படத்திலேயே
துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தனது அறிமுக படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் கார்த்திக் நரேன். நட்சத்திர நடிகர்கள் இல்லாமல், ரகுமானை தவிர பரீட்சையமான முகங்கள் யாரும் இல்லாமல் தனது வித்தியாசமான திரைக்கதை அமைப்பால் தமிழ் ரசிகர்களை ஈர்த்தார்.

சினிமா சிக்கல்
இவரது திறமையை பார்த்து வியந்த கெளதம் மேனன் தனது தயாரிப்பு நிறுவனமான ஒன்றாக எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் நரகாசூரன் படத்தை தயாரிக்க முன் வந்தார். கார்த்திக் நரேனும் கெளதம் மேனன் தயாரிப்பில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, ஆத்மிகாவை வைத்து நரகாசூரன் படத்தை இயக்கினார். ஆனால், கெளதம் மேனனுக்கு ஏற்பட்ட நிதி சிக்கல் காரணமாக அந்த படம் இன்று வரை ரிலீசாகவில்லை.

கடும் மோதல்
இதனால், செம்ம கடுப்பான கார்த்திக் நரேன், பல முறை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் இயக்குநர் கெளதம் மேனனுடன் நேரடி மோதலில் ஈடுபட்டார். எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் தேதி கடந்த ஆண்டு இறுதியில் கெளதம் மேனன் பதிவிட, நரகாசூரன் எப்போ சார் ரிலீசாகும் என்றும் கார்த்திக் கேட்டிருந்தார்.

லைகா
இதனால், தனது அடுத்த படத்தை பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தான் உருவாக்குவேன் என்ற முடிவில் இருந்த கார்த்திக் நரேனுக்கு கைகொடுத்தது லைகா நிறுவனம். அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரசன்னா என நட்சத்திர வேல்யூவுடன் இந்த படத்தை கார்த்திக் இயக்கி உள்ளார்.

மாஃபியா
இந்தியன் 2, பொன்னியின் செல்வன் என பிரம்மாண்ட படங்களை தயாரித்து வரும் லைகா நிறுவனம் மாஃபியா படத்தையும் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளது. போதை பொருள் கடத்தல் கும்பல் டானுக்கும், அதை தடுக்கும் அதிகாரிக்கும் இடையே நடக்கும் யுத்தமாக உருவாகியுள்ள மாஃபியா படத்துக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
எப்போ ரிலீஸ்
லைகா நிறுவனம் தயாரிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான சூப்பர்ஸ்டாரின் தர்பார் திரைப்படம் 150 கோடிக்கும் மேல் வசூல் குவித்து வருகிறது. இந்நிலையில், அடுத்ததாக மாஃபியா படத்தை ரிலீஸ் செய்ய லைகா திட்டமிட்டுள்ளது. அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி ஆக்ஷன் படமான மாஃபியா வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி ரிலீசாகும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











