ஆளே மாறிப்போன அருண்விஜய் - எல்லாத்துக்கும் காரணம் இயக்குநர் பாலாதான்
சென்னை: வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகியதை அடுத்து அந்தப் படத்தில் அருண் விஜய் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாலா முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். தேசிய விருது அந்தப் படம்தான் சியான் விக்ரமுக்கும் வாழ்க்கை கொடுத்தது. இதனையடுத்து நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், தாரை தப்பட்டை, நாச்சியார் ஆகிய படங்களை இயக்கினார் பாலா.

மெகா ஹிட்டான பிதாமகன்
சேது படத்தை முடித்துவிட்டு சூர்யாவை வைத்து நந்தா படத்தை இயக்கினார் பாலா. அந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து விக்ரமையும், சூர்யாவையும் வைத்து அவர் இயக்கிய பிதாமகன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. மேலும் அந்தப் படத்தில் நடித்ததற்காக விக்ரமுக்கு தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிதாமகன் படம் மூலம் பாலா தேசிய அளவிலும் கவனிக்கப்பட்டார்.

பாலா கொடுத்த தொடர் தோல்வி படங்கள்
பிதாமகன் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய நான் கடவுள், அவன் இவன், தாரை தப்பட்டை, நாச்சியார் ஆகிய படங்கள் தோல்வி படங்களாகவே அமைந்தன. இருந்தாலும் அவர் தேர்ந்தெடுத்த கதைக்களமும், நடிகர்களிடம் பாலா வாங்கிய நடிப்பையும் பார்த்து ஒட்டுமொத்த திரையுலகமும் ஆச்சரியம்தான் பட்டது. இதனால் சிறந்த இயக்குநர் என்ற பெயர் அவரிடமிருந்து நீங்காமல் இருந்துவந்தது. இதில் நான் கடவுள் படத்துக்காக பாலா தேசிய விருதையும் வென்றிருந்தார்.

பாலாவுக்கு ஆரம்பித்த பிரச்னை
நிலைமை இப்படி இருக்க விக்ரம் தனது மகனான துருவ்வை பாலா மூலம் அறிமுகம் செய்ய திட்டமிட்டு அவரிடம் ஒப்படைத்தார். அர்ஜுன் ரெட்டி படமும் பாலா இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்டது. வர்மா என்ற பெயரில் உருவாக்கப்பட்ட அந்தப் படத்தை பார்த்த விக்ரமுக்கும், தயாரிப்பு தரப்புக்கும் திருப்தி இல்லாததால் அந்தப் படத்தை ரிலீஸ் செய்யாமல் மீண்டும் வேறு ஒரு இயக்குநரை வைத்து ஆதித்யா வர்மா என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இது பாலாவுக்கு பெரிய கரும்புள்ளியாகவே கருதப்பட்டது.

குடும்ப பிரச்னை டூ வணங்கான் பிரச்னை
நிலைமை இப்படி இருக்க பாலாவுக்கும், அவரது மனைவியாக இருந்த மலருக்கும் பிரச்னை ஏற்பட்டு இருவரும் விவாகரத்து செய்தனர். இச்சூழலில் சூர்யாவுடன் வணங்கான் படத்தில் கமிட்டானார் பாலா. கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக கமிட்டானார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்க வணங்கானின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை வணங்கான் படத்திலிருந்து விலகுவதாக சூர்யா அறிவித்தார்.

வணங்கானில் கமிட்டான அருண்விஜய்
சூர்யா படத்திலிருந்து விலகினாலும் வணங்கான் படம் வேறு ஒரு ஹீரோவை வைத்து இயக்கப்படும் என பாலா அறிவித்திருந்தார். அதன்படி அந்தப் படத்தில் தற்போது அருண்விஜய் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. ஹீரோயினாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார் என தெரிகிறது. இந்நிலையில் அருண்விஜய் தாடியுடனும், சட்டை, வேட்டியுடனும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. அது வணங்கான் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் எனவும், இந்த லுக்கில் அருண்விஜய் பக்காவாக இருக்கிறார். எனவே இந்தப் படம் மூலம் இயக்குநர் பாலா கம்பேக் கொடுப்பார் எனவும் அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











