Ameer Daughter Wedding: அமீர் மகள் திருமணம்.. ஆர்யா, சீமான், வெற்றிமாறன்.. வாழ்த்திய பிரபலங்கள்!
மதுரை: இயக்குநர் அமீரின் மகள் அனி நிஷாவின் திருமணம் இன்று காலை மதுரை கருப்பாயூரணியில் உள்ள திருமண மண்டபத்தில் எளிமையான முறையில் நடைபெற்றது. திருமணத்துக்கு திரையுலகினர் பலர் வந்து கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இஸ்லாமிய முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் இயக்குநர் அமீர் வருகை தந்த பிரபலங்களோட ஆரத் தழுவி அளவளாவி பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
மதுரையில் பிறந்து வளர்ந்த அமீருக்கு 56 வயதாகிறது. எகனாமிக்ஸ் படித்தும் அவருக்கு இயக்குநராக வேண்டும் என்கிற ஆசை ஏற்படவே இயக்குநர் பாலாவிடம் சேது படத்தில் உதவி இயக்குநராக வந்து சேர்ந்தார். அதன் பின்னர் தனியாக படம் பண்ண முடிவெடுத்த அமீர் சூர்யாவை வைத்து 'மெளனம் பேசியதே’ படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார்.

மெளனம் பேசியதே படத்தைத் தொடர்ந்து கார்த்தியை பருத்தி வீரன் படத்தின் மூலம் ஹீரோவாக்கினார். அந்த படம் மிகப்பெரிய அங்கீகாரத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெற்றாலும் பல வருடங்களாக அந்த படம் காரணமாக பல பிரச்சனைகளை அமீர் சந்தித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அமீர் மகள் திருமணம்: மதுரையில் உள்ள கருப்பாயூரணியில் இயக்குநரும் நடிகருமான அமீரின் மகள் அனி நிஷாவின் திருமணம் இன்று காலை நடைபெற்றது. சாதாரண திருமண மண்டபத்தில் வெறும் பிளாஸ்டிக் சார்கள் போடப்பட்ட நிலையில், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சினிமா பிரபலங்கள் பலர் சந்தோஷத்துடன் நட்பு ரீதியாக திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய காட்சிகள் வெளியாகி உள்ளன.
ஆர்யா முதல் சீமான் வரை: ஆர்யா, சசிகுமார், சமுத்திரகனி, வெற்றிமாறன், சேரன், சீமான் உள்ளிட்ட பல தமிழ் சினிமா பிரபலங்கள் மதுரையில் நடைபெற்ற அமீர் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தனது மகளை வாழ்த்த வந்த சினிமா பிரபலங்களையும் நண்பர்களையும் அன்புடன் வரவேற்ற அமீர் அவர்களை ஆரத்தழுவி வரவேற்றது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
சுவையான பிரியாணி: இஸ்லாமிய முறைப்படி அமீர் மகள் திருமணம் இன்று நடைபெற்றது. மேலும், திருமணத்துக்கு வந்த பிரபலங்களுக்கு சூடான சுவையான பிரியாணி விருந்து பறிமாறப்பட்டது. ஆனால், பிரபலங்கள் யாரும் மொய் பணமோ அல்லது பரிசு பொருட்களோ வழங்க வேண்டாம் என மணமக்கள் கேட்டுக் கொண்டனர்.
ஜாபர் சாதிக் விவகாரம்: பருத்தி வீரன் பிரச்சனை ஒரு பக்கம் கடந்த ஆண்டு அமீரை வாட்டி வதைத்த நிலையில், இந்த ஆண்டு ஜாபர் சாதிக் விவகாரத்தில் அமீர் சிக்கிக் கொண்டார். அவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். தன் மீது எந்தவொரு குற்றமும் இல்லை என்றும் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் தான் வரத் தயார் என அமீர் வீடியோ மூலமே அந்த விவகாரத்துக்கு விளக்கம் அளித்திருந்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தில் அமீருக்கு முக்கிய கதாபாத்திரம் இருக்கிறது. சூர்யா 44 படத்தை முடித்து விட்டு சூர்யாவே அந்த படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக அமீர் நடித்த உயிர் தமிழுக்கு திரைப்படம் இந்த ஆண்டு வெளியானது. இறைவன் மிகப்பெரியவன் படம் அப்படியே டிராப் செய்யப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











