சூர்யாவுடன் மோதும் சந்தானம்.. பிறந்தநாள் அதுவுமா பக்காவா வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் ஃபர்ஸ்ட் லுக்!
சென்னை: நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் இன்றைக்கு மிகவும் முக்கியமான நடிகர்களில் ஒருவராக உள்ளார். கமெடி கதாபாத்திரத்தில் நடித்து, அதன் பின்னர் தற்போது, கதாநாயகனாக ஸ்கோர் செய்து வருகின்றார். இன்று அவர் தனது 45வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் இவரது அடுத்த படமான டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ரிலீஸ் தேதியை படத்தின் தயாரிப்பாளர் ஆர்யா தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த சந்தானம், சிம்புவின் மன்மதன் படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வெற்றிகரமான காமெடியனாக வலம் வந்தார். பல படங்களில் வெற்றிக்கு இவர்தான் காரணமாக இருந்தார். ஒருகட்டத்தில் தான் காமெடியனாக நடிக்க மாட்டேன் எனத் தெரிவித்த அவர், தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வருகின்றார்.

இவர் காமெடியனாக நடித்து, 12 ஆண்டுகளுக்கு முன்னர் ரிலீஸ் ஆகவேண்டி இருந்த, மத கஜ ராஜா படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி பெரும் வெற்றி பெற்றது. படம் பார்த்த ரசிகர்கள், சந்தானத்தை காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக முன்னதாகவே, சந்தானம் தெளிவான ஒரு விஷயத்தைச் சொல்லி இருந்தார். அதாவது, ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன் 2 படத்தில் காமெடியனாக நடிக்க தான் எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்தார். அதேபோல் சிம்புவிடம் பேசும்போது, காமெடியனாக அவரது படங்களில் நடிக்கத் தயார் எனவும் கூறியதாக கூறினார்.

டிடி: சந்தானம் இன்று தனது 45வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவர் இப்போது டிடி நெக்ஸ்ட் லெவன் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தில், கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். ஆர்யா தயாரிக்கும் இந்தப் படத்தின் அறிவிப்புகள் நேற்றில் இருந்து தொடர்ந்து வெளியாகிக் கொண்டு உள்ளன. நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், இன்று படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தானம்: இது தொடர்பாக, நடிகரும் படத்தின் தயாரிப்பாளருமான ஆர்யா தனது எக்ஸ் பக்கத்தில், இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் டார்லிங் சந்தானம். தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வரும் தில்லுக்கு துட்டு படத்தின் அடுத்த பாகத்தை தயாரிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கினை வெளியிடுவதிலும் மகிழ்ச்சியாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் படம் வரும் மே மாதத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஃபர்ஸ்ட் லுக்: இந்தத் தகவல் சந்தானம் ரசிகர்களையும் தில்லுக்குத் துட்டு படத்தின் அடுத்தடுத்த பாகங்களின் ரசிகர்களின் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில், ஷோபாவில் அமர்ந்திருக்கும் சந்தானம், ஒரு கையில் எலும்பைப் பிடித்துக் கொண்டும், தனது இடது காலை ஒரு எலும்புக் கூட்டின் தலையின் மீதும் வைத்துள்ளார்.
இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. படம் மே மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது எனத் தெரிவித்துள்ளதால், படம் மே மாதம் 1ஆம் தேதி ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. மேல் 1ஆம் தேதி சூர்யாவின் ரெட்ரோ படம் ரிலீஸ் ஆகவுள்ளது என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

மே ரிலீஸ்: மேலும் ஜூன் மாதம் தக் லைஃப் படம் ரிலீஸ் ஆகவுள்ளதால், படத்தினை மே 1ஆம் தேதி அல்லது மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கு முன்னர் ரிலீஸ் ஆன தில்லுக்கு துட்டு படத்தின் பாகம் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால், இந்தப் படமும் குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரது மத்தியிலும் ஹிட் அடிக்கும் என படக்குழு நம்பிக்கையில் உள்ளது.



Click it and Unblock the Notifications











